நான் எங்கமா அப்படிலாம் சொன்னேன்? நீயா தப்பா புரிஞ்சுகிட்டு ஏதாச்சும் பேசாத.! கவாஸ்கர் தன்னிலை விளக்கம்

First Published | Sep 26, 2020, 6:10 PM IST

விராட் கோலியின் பேட்டிங் குறித்து தான் கூறிய கருத்துக்கு அனுஷ்கா சர்மா பதிலடி கொடுத்திருந்த நிலையில், தான் கூறிய கருத்து குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் கவாஸ்கர்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, வழக்கத்திற்கு மாறாக ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே படுமோசமாக சொதப்பினார். ஃபீல்டிங்கில் கேஎல் ராகுலின் 2 எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டார் கோலி. அந்த கேட்ச்களை தவறவிட்டதற்கு பின்னர் 9 பந்தில் 42 ரன்களை குவித்தார் ராகுல். எனவே அந்த கேட்ச் வாய்ப்பு ஆட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல பேட்டிங்கிலும் வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார்.
Tap to resize

வழக்கமாக பேட்டிங், ஃபீல்டிங், ஃபிட்னெஸ் என அனைத்திலும், ஒரு கேப்டனாக தனது அணி வீரர்களுக்கு முன்னோடியாக இருந்து முன்னின்று வழிநடத்தும் கோலி, நேற்று அதை செய்ய தவறினார். அதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்தார். போட்டிக்கு பின்னர் பேசும்போது, தோல்விக்கு இரு கைகளை உயர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார் கோலி.
இதற்கிடையே, கோலி ஒரு ரன்னில் அவுட்டானது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், லாக்டவுனில் கோலி, அவரது மனைவியின் பவுலிங்கில் மட்டுமே பேட்டிங் ஆடி பயிற்சி செய்திருக்கிறார் என்று ஒரு கமெண்ட் செய்தார்.
லாக்டவுனில் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீட்டில் கிரிக்கெட் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. எனவே அதை மனதில் வைத்து கவாஸ்கர் அப்படி கூறினார்.
ஆனால் கவாஸ்கரின் பேச்சை ரசிக்காத கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா கவாஸ்கருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டார்.
அதில், மிஸ்டர் கவாஸ்கர், உங்கள் மெசேஜ் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் உங்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். விளையாட்டு வீரராக இருக்கும் கணவரின் ஆட்டத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களுக்கு மனைவியை எப்படி குற்றம்சொல்லமுடியும்? கிரிக்கெட் வீரர்களை மதிப்பவர் நீங்கள்.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆட்டத்தில் இழுக்க மாட்டீர்கள்.
அதே மரியாதையை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? என் கணவர் சரியாக ஆடாததை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் என்னை ஏன் அதில் இழுக்கிறீர்கள்? 2020ல் நாம் இருக்கிறோம். ஆனால் என்னை கிரிக்கெட்டுக்குள் இழுத்துவிடுவதை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை. மரியாதைக்குரிய மிஸ்டர் கவாஸ்கர், நீங்கள் ஒரு லெஜண்ட். கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்தில் உள்ள மதிப்பிற்குரியவர் நீங்கள். நீங்கள் எங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்டதும் இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் சொன்னேன் என்று அனுஷ்கா சர்மா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தான் கூறிய கருத்து குறித்து தன்னிலை விளக்கமளித்து தெளிவுபடுத்தியுள்ளார் கவாஸ்கர்.
அதுகுறித்த கவாஸ்கரின் விளக்கத்தில், நானும்(கவாஸ்கர்) ஆகாஷ் சோப்ராவும் ஹிந்தி கமெண்ட்ரியில் பேசியபோது, வீரர்கள் லாக்டவுனில் பெரியளவில் பயிற்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்று ஆகாஷ் சோப்ரா சொன்னார். அது உண்மைதான்.. முதல் சில போட்டிகளில் நல்ல வீரர்களே கூட சரியாக ஆடவில்லை. ரோஹித் சர்மா, தோனி, கோலி என யாருமே முதல் போட்டியில் சரியாக ஆடவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி பற்றாக்குறை இருந்தது.
அதைப்பற்றித்தான் நாங்கள் பேசினோம். அப்போது, நான் சொன்னேன்.. கோலிக்கு பயிற்சி இல்லை; அவர் செய்த ஒரே பேட்டிங் பயிற்சி வீட்டு காம்பவுண்ட்டுக்குள் தான்.. அதுவும் அனுஷ்காவின் பவுலிங்கில் என்று நான் சொன்னேன். நான் அப்படித்தான் சொன்னேனே தவிர, தவறான அர்த்தத்த்தில் எதுவுமே சொல்லவில்லை. விராட் சரியாக ஆடாததற்கு நான் எப்போது உங்களை(அனுஷ்கா சர்மா) குறைகூறினேன்? நான் தவறான அர்த்தத்தில் எதுவும் சொல்லவில்லை. சிலர் அதை திரித்துக்கூறி பரப்பினால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
லாக்டவுனில் யாருமே பயிற்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்ற விஷயத்தை பற்றித்தான் பேசினேனே தவிர, தவறாக எதுவும் பேசவில்லை. மறுபடியும் கேட்கிறேன்.. நான் எங்கே அனுஷ்கா மீது குற்றம்சுமத்தினேன்? என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!