ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத, முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது.
முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள அணிகள் அபாரமாக ஆடிவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியும் 3 முறை சாம்பியனுமான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் நல்ல தொடக்கம் அமையவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அம்பாதி ராயுடுவின் புண்ணியத்தால் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, அவர் ஆடாத அடுத்த 2 போட்டிகளிலும் படுமோசமாக தோல்வியடைந்தது.
ரெய்னாவும் இல்லாததால் பேட்டிங் ஆர்டர் பலவீனமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. பொதுவாகவே அணியின் பலவீனம் வெளியே தெரியாத அளவிற்கு ஆடும் சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அதன் பேட்டிங் ஆர்டர் மோசமாக இருப்பதை எதிரணிகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 217 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட முடியாமல் தோற்றது கூட பரவாயில்லை. டெல்லி கேபிடள்ஸ் நிர்ணயித்த 176 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வியடைந்தது.
சிஎஸ்கேவில் இந்த சீசனில் டுப்ளெசிஸ் மட்டுமே சீராக ஆடிவருகிறார். அவரை தவிர மற்ற அனைவருமே சொதப்பிவருகின்றனர். டெல்லிக்கு எதிரான போட்டியில் இலக்கை விரட்ட வேண்டும் என்ற நோக்கமே இல்லாமல் 20 ஓவர் சும்மா கடமைக்கு சிஎஸ்கே வீரர்கள் ஆடியது அப்பட்டமாக தெரிந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டமுடியாமல் சிஎஸ்கே தோற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் மோசமான சில முடிவுகளால் தான் சிஎஸ்கே அணி தோற்றதாக சேவாக் தெரிவித்துள்ளார்.