ஐபிஎல் 13வது சீசனின் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 217 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டமுடியாமல் சிஎஸ்கே தோற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் மோசமான சில முடிவுகளால் தான் சிஎஸ்கே அணி தோற்றதாக சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், சாம் கரன் அவுட்டானதும் தோனி இறங்கியிருக்க வேண்டும்; அல்லது ஜடேஜாவையாவது இறக்கிவிட்டிருக்க வேண்டும். மிடில் ஓவர்களில் ரன்ரேட் வெகுவாக குறைந்துவிட்டது. ஓவருக்கு 20-22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் சும்மா 3 சிக்ஸர்களை விளாசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. என்ன ஒரு அருமையான ஃபினிஷ் என்று சிலர் சொல்லுவார்கள்; அவ்வளவுதான்.
கேதர் ஜாதவுக்கு முன்பாகவாவது தோனி இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் செய்யவில்லை. மிடில் ஓவர்களில் வீணடிக்கப்பட்ட பந்துகள் தான், ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த வீணடிக்கப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை தான், தோல்விக்கான காரணமாக அமைந்தது.
சிஎஸ்கேவின் ஃபீல்டிங்கின் போது கூட, தோனி கேப்டன்சியில் சில தவறுகளை செய்தார். ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லாவின் பந்தை சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்குகிறார் என்றபோதிலும், தொடர்ச்சியாக அவர்களுக்கு பவுலிங் கொடுத்தார். அது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.
லுங்கி இங்கிடியை மீண்டும் பந்துவீச அழைத்ததுமே, அவர் வந்து சாம்சனை வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் சாவ்லா வீசிய 2 ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். லுங்கி இங்கிடியை முன்பே அழைத்து வந்திருக்க வேண்டும். இவ்வாறு தோனி கேப்டன்சியில் பல தவறுகளை செய்தார் என்று தோனியின் கேப்டன்சிக்கு 10க்கு 4 மார்க் தான் கொடுத்தார் சேவாக்.