ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த சீசனின் 3வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆர்சிபியும் மோதின. அந்த போட்டியில் ஆர்சிபி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு, அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருப்பதுதான் காரணம். மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, சிஎஸ்கேவில் தோனி, கேகேஆரில் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஃபினிஷர் கிடையாது. அதனால் அந்த அணி அதிகமாக அதன் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவையே சார்ந்துள்ளது.
இந்த சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், சன்ரைசர்ஸின் ஃபினிஷராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பந்துவீசும்போது ஸ்லிப் ஆகி, அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அதனால் அந்த போட்டியில் இரண்டே பந்து வீசியதுடன் பெவிலியனுக்கு திரும்பிய மிட்செல் மார்ஷ், வலியை பொறுத்துக்கொண்டு கடைசி நேரத்தில் பேட்டிங் ஆட வந்தார். ஆனால் டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷின் காயம் தான், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸூக்கு பின்னடைவாகவும், தோல்விக்கும் வழிவகுப்பதாகவும் அமைந்தது.
இந்நிலையில், அவரது காயம் தீவிரமாக இருப்பதால், இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த சீசனில் ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவுதான். எனினும் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டரும் டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜேசன் ஹோல்டரை மார்ஷுக்கு மாற்று வீரராக அறிவித்துள்ளது சன்ரைசர்ஸ். அவர் விரைவில் சன்ரைசர்ஸ் அணியுடன் இணையவுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணி:டேவிட் வார்னர்(கேப்டன்), கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், ரஷீத் கான், முகமது நபி, அபிஷேக் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, ரிதிமான் சஹா, கோஸ்வாமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் ஷர்மா, சித்தார்த் கவுல், ஷேபாஸ் நதீம், பில்லி ஸ்டேன்லேக், பாசில் தம்பி, டி.நடராஜன், ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ப்ரியம் கர்க், விராட் சிங், சந்தீப் பாவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத்.