ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் வாய்ப்பிற்கு, கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுடன் போட்டி போடுகிறது.
முதல் 7 போட்டிகளில் ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரரும் அதிரடி மன்னருமான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் ஆடவில்லை. 8வது போட்டியிலிருந்து பஞ்சாப் அணியில் கெய்ல் ஆடுகிறார். கெய்ல் அணிக்கு வந்த பிறகு ஆடிய 3 போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
கெய்ல் அணிக்கு வந்ததால் ராகுல் தொடக்கம் முதலே தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடுகிறார். அதற்கு முன், மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்ததால், மயன்க் அகர்வாலை அடித்து ஆடவைத்துவிட்டு, ராகுல் நிதானமாகவே ஆடினார். ஆனால் கெய்ல் வந்தபிறகும், ராகுலும் மயன்க் அகர்வாலுமே தொடக்க வீரர்களாக இறங்கினாலும், கெய்ல் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தொடக்கம் முதலே அடித்து ஆடும் சுதந்திரம் ராகுலுக்கு கிடைத்திருக்கிறது.
கெய்ல் இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி 106 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல்லில் 128 போட்டிகளில் 4590 ரன்களை குவித்திருப்பதுடன், ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்(175*), அதிகமான சிக்ஸர்கள்(335) ஆகிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் கெய்ல்.
கெய்லை பெரும்பாலானோர் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அவர் ஸ்மார்ட்டான, புத்திக்கூர்மையான பேட்ஸ்மேன் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கெய்ல் குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், கெய்லை பற்றி பேசும்போது மக்கள் அவரது அதிரடியான பேட்டிங்கையும் பெரிய ஷாட்டுகளையும் பற்றியே பேசுகின்றனர். ஆனால் கெய்ல் வெறுமனே அடித்து ஆடக்கூடிய வீரர் மட்டுமல்ல; அவர் ஸ்மார்ட்டான பேட்ஸ்மேன். அவர் அதிரடி வீரர் தான். ஆனாலும் ஸ்மார்ட்டான, புத்திக்கூர்மையான வீரர். அனைத்து பவுலர்களையும் அடிக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார். நல்ல பவுலர்களை சிங்கிள் ரொடேட் செய்து ஆடிவிட்டு, எந்த பவுலரை பலவீனமானவர் என்று அவர் நினைக்கிறாரோ அந்த பவுலரை மட்டுமே அடித்து ஆடுவார். ஒன்றிரண்டு பவுலர்களை டார்கெட் செய்து அடிப்பார்.
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக துஷார் தேஷ்பாண்டேவை டார்கெட் செய்து அவரது ஒரு ஓவரில் 26 ரன்கள் அடித்தார். கெய்ல் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்று நினைக்கும் வீரர் அல்ல. அவர் அதை செய்ததே இல்லை. ஆடுகளத்தின் தன்மை, பவுலர்களின் பலம் பலவீனம், பவுன்ஸ் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்து, எந்த பவுலரை எப்போது அட்டாக் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு தெளிவாக அடிக்கக்கூடியவர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.