கேகேஆர் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, 7.2 ஓவரில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில் 9 ரன்களுக்கும் திரிபாதி 13 ரன்களுக்கும் தினேஷ் கார்த்திக் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற நிதிஷ் ராணாவுடன், சுனில் நரைன் ஜோடி சேர்ந்தார். சுனில் நரைன் களத்திற்கு வந்த முதல் பந்திலிருந்தே அடித்து ஆட தொடங்கினார். கடும் மோசமான நிலையில் இருந்த கேகேஆர் அணியை சரிவிலிருந்து மீட்டு நல்ல நிலைக்கு அழைத்து சென்றார் சுனில் நரைன்.
அஷ்வின் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஓவர்களில் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி மளமளவென ஸ்கோரை உயர்த்தினார் சுனில் நரைன். அஷ்வின் வீசிய 8வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசிய நரைன், தேஷ்பாண்டே வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். அதற்கடுத்தடுத்த ஓவர்களிலும் நரைன் மற்றும் ராணா ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ராணா அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து 24 பந்தில் நரைனும் அரைசதம் அடித்தார்.
7.2 ஓவரில் 42 ரன்கள் என்ற நிலையில் இருந்த கேகேஆர் அணி, நரைன் மற்றும் ராணாவின் அதிரடியால் 16.4 ஓவரில் 157 ரன்கள் என்ற நிலையை எட்டியது. நரைனும் ராணாவும் இணைந்து 54 பந்தில் 115 ரன்களை குவித்தனர். 32 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களுக்கு ரபாடாவின் பந்தில் 17வது ஓவரில் நரைன் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ராணா, 52 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 81 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி 194 ரன்களை குவித்து 195 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.