ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனில் அருமையாக ஆடி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்து விதத்திலும் நல்ல காம்பினேஷனை கொண்ட வலுவான அணியாக திகழும் ஆர்சிபி, 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் நன்றாக ஆடிவந்த ஆர்சிபி அணி, சிஎஸ்கேவிற்கு எதிராக படுமோசமாக தோற்றது. ஆர்சிபி அணிக்கு எஞ்சிய 3 போட்டிகளும் முக்கியமான போட்டிகள். அடுத்த போட்டியில் ஆர்சிபி அணி, சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி காயத்தால் அவதிப்படுகிறார்.
இந்த சீசனில் ஆர்சிபி அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனி. 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய சைனி, பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அருமையாக வீசி ஆர்சிபி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் சைனி.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில், ஃபீல்டிங் செய்யும்போது அவரது வலது கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கை பவுலரான அவருக்கு, அவர் பந்துவீசும் கையிலேயே அடிபட்டிருப்பதால் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகம்.
நல்ல வேளையாக, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை பெற்றிருப்பதால், உடனடியாக சைனிக்கு தையல் போடப்பட்டதாகவும், ஆனாலும் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது குறித்து உறுதியாக எதையும் சொல்லமுடியாது என்றும் ஆர்சிபி அணியின் ஃபிசியோதெரப்பிஸ்ட் தெரிவித்துள்ளார்.
நல்ல பேட்டிங் டெப்த்தையும், அதிரடி மன்னர்களை அதிகமாக கொண்ட மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சைனி ஆடவில்லையென்றால், அது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.