ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்கும் 3 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் ஒன்று. இந்த சீசனிலும் அதே முனைப்பில் தான் களமிறங்கியுள்ளது.
இந்த சீசனில் புதிய கேப்டன்(ராகுல்), புதிய தலைமை பயிற்சியாளர்(அனில் கும்ப்ளே) என புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் களம் கண்டுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் மயன்க் அகர்வால் கடைசி வரை தனி ஒருவனாக போராடினார். ஆனால் போட்டி டை ஆகி பின்னர், சூப்பர் ஒவரில் பஞ்சாப் அணி தோற்றது.
இதையடுத்து நேற்று ஆர்சிபிக்கு எதிராக ஆடிய போட்டியில் கேஎல் ராகுலின் அபார சதத்தால்(132 ரன்கள்) 20 ஓவரில் 206 ரன்களை குவித்த பஞ்சாப் அணி, ஆர்சிபி அணியை 109 ரன்களுக்கே சுருட்டி 97 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பாக செயல்பட்டது பஞ்சாப் அணி.
கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக இறங்கிவந்த அதிரடி மன்னன், யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லுக்கு முதல் 2 போட்டிகளிலுமே ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், ஷெல்டான் கோட்ரெல், ஜிம்மி நீஷம்கிறிஸ் ஜோர்டான் ஆகிய நால்வருமே வெளிநாட்டு வீரர்களாக இடம்பெற்றனர்.
ஐபிஎல்லில் 175 என்ற அதிகபட்ச ஸ்கோருடன், 4484 ரன்களை குவித்து, 326 சிக்ஸர்களுடன் ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்களை விளாசிய மாபெரும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் என்றாலும், அவருக்கு 41 வயது ஆகிவிட்டது. அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தமாட்டார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆடவில்லை. கிரிக்கெட் ஆடி நீண்டகாலம் ஆகிவிட்டது. மேலும் ஃபீல்டிங்கும் சரியாக செய்யமாட்டார். எனவே 41 வயதான கெய்லை இனியும் எடுப்பது சிரமம்தான். அதனால்தான் அவர் அணியில் எடுக்கப்படவில்லை என்பது எதார்த்தம்.
இந்நிலையில், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது, இதுகுறித்து பஞ்சாப் அணி கேப்டன் ராகுலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், கெய்ல் மாதிரி வீரரை பென்ச்சில் உட்கார வைப்பது கடினமான முடிவுதான். எனினும் சரியான நேரத்தில் கெய்ல் களமிறக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
கெய்லுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பில்லை என்ற எதார்த்தத்தையும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக சொல்ல முடியாமல் என்பதால் பூசி மொழுகிவிட்டு சென்றார் ராகுல்.