பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. கொஞ்சம் அசந்தாலும் சும்மா விடுவாரா நம்ம தல..! சிஎஸ்கேவிற்கு செம சவாலான இலக்கு

First Published | Sep 25, 2020, 9:28 PM IST

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 175 ரன்களை குவித்து 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், ஆரம்பத்தில் மிக மெதுவாக தொடங்க, பிரித்வி ஷா வழக்கம்போலவே தொடக்கம் முதலே தனது ஷாட்டுகளை ஆட ஆரம்பித்தார். ஒருமுனையில் தவான் மந்தமாக ஆடினாலும், பிரித்வி ஷாவின் அதிரடியான பேட்டிங்கால் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பவர்ப்ளேயில்(6 ஓவர்) டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
Tap to resize

பவர்ப்ளே முடிந்து, பியூஷ் சாவ்லாவும் ஜடேஜாவும் பந்துவீச வந்தபின்னர் அடித்து ஆட ஆரம்பித்த தவான், 27 பந்தில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு பிரித்வியும் தவானும் இணைந்து 10.4 ஓவரில் 94 ரன்களை குவித்தனர்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், பியூஷ் சாவ்லாவின் பந்தை இறங்கிவந்து அடிக்க முயன்றபோது, சரியாக அடிக்காமல் விட்டார். ஆனால் பந்து பக்கத்திலேயே கிடப்பதை உணராமல் லேசாக ஓடமுயன்று, பின்னர் சுதாரித்து க்ரீஸுக்குள் வர முயன்றார். ஆனால் விடுவாரா தோனி? அதற்குள்ளாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்ததால் பிரித்வி ஷா, 43 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ரிஷப் பண்ட் ஓரளவிற்கு அடித்து ஆட, ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறினார். தட்டுத்தடுமாறி 22 பந்தில் 26 ரன்கள் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 22 பந்தில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார்.
கடைசி ஓவரில் ரிஷப் பண்ட் ஒரு பவுண்டரியும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு பவுண்டரியும் அடிக்க, லெக் பைஸில் ஒரு பவுண்டரி கிடைக்க, கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்து இன்னிங்ஸை முடித்த டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 175 ரன்களை குவித்து 176 என்ற மிகச்சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.

Latest Videos

click me!