ஐபிஎல் 2020: கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் திடீர் எழுச்சி.. முக்கியமான 3 காரணங்கள்.. ஓர் அலசல்

First Published | Oct 22, 2020, 3:35 PM IST

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் எழுச்சிக்கான காரணங்கள் குறித்த அலசலை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம், தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில், புதிய கேப்டன் கேஎல் ராகுலின் தலைமையில் அந்த அணி களம் கண்டதுதான்.
ஆனால் முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது பஞ்சாப் அணி. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அந்த அணி சொதப்பியது. பேட்டிங்கில் ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலை மட்டுமே சார்ந்திருந்தது. பவுலிங்கில் ஷமி, ரவி பிஷ்னோயை தவிர மற்றவர்கள் சொதப்பினர்.
Tap to resize

அதையும் மீறி, ராகுல், மயன்க், ஷமி, பிஷ்னோயின் சிறப்பான ஆட்டத்தால், வெற்றிக்கு அருகில் சென்றாலும், கடைசி ஒருசில ஓவர்களில் சொதப்பி, வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டிகளில்(டெல்லி கேபிடள்ஸ், கேகேஆர்) கூட தோல்வியை தழுவியது.
முதல் பாதியில் சொதப்பிய பஞ்சாப் அணி, சீசனின் 2ம் பாதியில் தொடர்ச்சியாக, அதுவும் புள்ளி பட்டியலில் டாப்பில் இருக்கும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் இருப்பதுடன், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் அணியின் இந்த எழுச்சிக்கான காரணங்களை பார்ப்போம்.1. கெய்லின் கம்பேக்இந்த சீசனின் முதல் பாதியில் கெய்ல் ஆடவில்லை. சீசனின் இரண்டாம் பாதியில் கெய்ல் சேர்க்கப்பட்டார். கெய்ல் அணியில் இருந்தாலும் அவர் தொடக்க வீரராக இறங்கவில்லை. தொடக்க வீரர்களாக ராகுலும் மயன்க் அகர்வாலுமே இறங்கினர். ஆனாலும் கெய்ல் இருப்பது ராகுலுக்கு நம்பிக்கையளிப்பதால், தொடக்கம் முதலே அவரால் துணிச்சலாக அடித்து ஆடமுடிகிறது. கெய்ல் ஆடாதபோது, மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பலால், ராகுல் கடைசி வரை களத்தில் நின்று ஆட வேண்டிய பொறுப்பை பெற்றிருந்தார். அதனால் மயன்க் அகர்வாலை அடித்து ஆடவிட்டு ராகுல் நிதானமாக ஆடினார். கெய்ல் அணிக்கு வந்த பின்னர், ராகுல் அடித்து ஆடுகிறார். கெய்லும் தனது அதிரடி பேட்டிங்கின் மூலம் சில பந்துகளில் ஆட்டத்தை திருப்பிவிடுகிறார்.
2. மிடில் ஆர்டர் பேட்டிங்இந்த சீசனின் தொடக்கத்தில் சந்தீப் சிங், கருண் நாயர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோருக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மிடில் ஆர்டரில் சொதப்பினர். பூரானும் சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளில் ஸ்டார்ட் கிடைத்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாமல் திணறிவந்தார். கெய்லின் வருகைக்கு பிறகு மிடில் ஆர்டர் வலுப்பெற்றதுடன், பூரானும் ஃபார்முக்கு வந்து அதிரடியாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடுவதுடன், ராகுல், மயன்க் அகர்வால் சோபிக்காத நிலையிலும், கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்று வெற்றி பெற்றுக்கொடுக்கின்றனர். மேக்ஸ்வெல்லும் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக சில நல்ல ஷாட்டுகளை ஆடி ஃபார்முக்கு திரும்பிவிட்டார்.
3. டெத் பவுலிங்முதல் சில போட்டிகளில் டெத் ஓவர்களில் சொதப்பியதன் விளைவாக மட்டுமே பஞ்சாப் அணி தோல்விகளை தழுவிவந்தது. அதுமட்டுமல்லாது, பஞ்சாப் அணிக்கு சரியாக ஐந்து பவுலிங் ஆப்சன் மட்டுமே இருந்ததால் கேப்டன் ராகுலால் பவுலர்களை சரியான சுழற்சி முறையில் பந்துவீச வைக்க முடியாமல் திணறிவந்தார். ஷமிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீசும் சரியான ஃபாஸ்ட் பவுலிங் பார்ட்னர் இல்லாமல் இருந்தது. இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங்கின் சேர்க்கைக்கு பிறகு, அந்த அணியின் பவுலிங் யூனிட் வலுப்பெற்றுவிட்டது.
பத்தே முக்கால் கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் பேட்டிங் தான் சரியாக ஆடவில்லை; பவுலிங்காவது கொடுத்து பார்ப்போம் என்ற பஞ்சாப் அணியின் வியூகம் பலன் தருகிறது. மேக்ஸ்வெல் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதால், அவரை வைத்து மிடில் ஓவர்களில் 3, 4 ஓவர்களை தள்ளிவிடுகிறார் கேப்டன் ராகுல். அதனால் டெத் ஓவர்களில் பவுலிங் ஆப்சன் விரிவடைந்துள்ளது. அதனால் ஒரு பவுலர் அடி வாங்கினாலும் மற்றொருவரை மாற்றிவீச வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Latest Videos

click me!