ஆரவல்லி மலைத்தொடருக்கான புதிய வரையறையை ஏற்றுக்கொண்ட தனது முந்தைய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வரையறையின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆரவல்லி மலைத்தொடருக்கான புதிய வரையறையை ஏற்றுக்கொண்ட தனது முந்தைய தீர்ப்பைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.
25
அறிவியல்பூர்வமான வரையறை
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, ஆரவல்லி மலைத்தொடருக்கு ஒரு புதிய 'அறிவியல் பூர்வமான' வரையறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி, 100 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே 'ஆரவல்லி மலைகள்' எனக் கருதப்படும். 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் இரண்டு மலைகள் 'மலைத்தொடர்' எனக் கருதப்படும்.
இந்த வரையறையால் சுமார் 90% மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து வெளியேறும் என்றும், அங்கு சட்டப்பூர்வமான சுரங்கத் தொழில் தடையின்றி நடக்கும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
35
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.ஜி. மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து (Suo motu) விசாரணைக்கு எடுத்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள், “முந்தைய குழுவில் பெரும்பாலும் அரசு அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். எனவே, தற்போதைய வரையறையின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட புதிய குழு அமைக்கப்படும்” எனக் கூறினர்.
“100 மீட்டர் உயரத்திற்கும் குறைவாக உள்ள குன்றுகளைப் பாதுகாப்பிலிருந்து நீக்குவது, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையைப் பாதிக்கும். 500 மீட்டர் இடைவெளி என்ற குறுகிய வரையறை 'கட்டமைப்பு முரண்பாடுகளை' (Structural Paradox) உருவாக்குகிறதா என்பது ஆராயப்பட வேண்டும். புதிய நிபுணர் குழுவின் அறிக்கை வரும் வரை, நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது.” என நீதிமன்றம் அறிவித்தது.
இதனால் புதிய சுரங்க குத்தகைகளுக்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
55
காங்கிரஸ் வரவேற்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த முடிவை வரவேற்றுள்ளார். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வரையறையை மாற்ற முயன்ற மத்திய அரசுக்கு இது ஒரு பின்னடைவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026, ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.