இந்திய ராணுவம், 120 கி.மீ. தாக்குதல் வீச்சு கொண்ட உள்நாட்டு 'பினாகா' ராக்கெட்டுகளை படையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. DRDO-வால் உருவாக்கப்படும் இந்த புதிய ராக்கெட்டுகளை, தற்போதுள்ள லாஞ்சர்களிலிருந்தே ஏவ முடியும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் நீண்ட தூர பீரங்கித் தாக்குதல் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், 120 கி.மீ. தாக்குதல் வீச்சு கொண்ட 'பினாகா' ராக்கெட்டுகளை இந்திய ராணுவம் படையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டம் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பில் தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
25
உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்துவம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மல்டி பேரல் ராக்கெட் ஏவுகணைகளை (MLRS) மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
120 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ராக்கெட்டுகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்படும். இதற்கான முதல் சோதனைகள் விரைவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு, டெவலப்மென்ட்-கம்-புரொடக்ஷன் பார்ட்னர்கள் (DcPPs) தேர்வு செய்யப்பட்டு, உற்பத்தியை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற ராணுவத்தின் முன்மொழிவு, விரைவில் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சிலின் (DAC) பரிசீலனைக்கு வரவுள்ளது.
35
ஒரே லாஞ்சரில் மேம்பட்ட தாக்குதல்
தற்போதுள்ள 'பினாகா' ராக்கெட் லாஞ்சர் அமைப்பானது, 40 கி.மீ மற்றும் 75 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில், புதிதாக உருவாக்கப்படும் 120 கி.மீ. தாக்குதல் வீச்சு கொண்ட ராக்கெட்டுகளை, தற்போதுள்ள அதே லாஞ்சரிலிருந்து ஏவ முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது ராணுவத்தின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் ஒரு முக்கிய அம்சமாகும்.
இந்திய ராணுவம் தற்போதுள்ள 'பினாகா' படைப்பிரிவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் ADM வெடிமருந்து மற்றும் HEPF ரக ராக்கெட்டுகளை வாங்குவதற்காக ரூ.10,147 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
'பினாகா' ராக்கெட் லாஞ்சர் அமைப்பானது, DRDO-வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நீண்ட தூர பீரங்கி ஆயுதமாகும். இது நவீன போரில் இந்திய ராணுவத்தின் துரிதமான, துல்லியத் தாக்குதல் திறனை மேம்படுத்துகிறது.
55
ஏற்றுமதியும் எதிர்காலத் திட்டமும்
உள்நாட்டு ஆயுத அமைப்புகளில் 'பினாகா' ஒரு பெரிய ஏற்றுமதி வெற்றியைப் பெற்றுள்ளது. ஆர்மீனியா இந்த அமைப்பை ஏற்கனவே வாங்கியுள்ள நிலையில், பிரான்ஸ் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, நீண்ட தூர பினாகா ஏவுகணைகள் தயாரானவுடன், ராணுவம் பிற மாற்று ஆயுதங்களுக்கான திட்டங்களைக் கைவிடலாம் என்று கூறியுள்ளார். DRDO அடுத்த நிதியாண்டில் 120 கி.மீ. தாக்குதல் திறன் கொண்ட 'பினாகா' ராக்கெட்டுகளின் முதல் சோதனையை நடத்த உள்ளது.