நரேந்திர மோடி 2014 மே 26 அன்று முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார், பின்னர் மே 30, 2019 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் (மே 30ஆம் தேதி) ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஆட்சிக் காலத்தில் நாடுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
2014-ல் 1 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது 3.5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரதேஷ் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.
“இந்தியாவில் 50 லட்சம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. இந்தியா ரூ.36 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2014ல் வெறும் ரூ.19 லட்சம் கோடியாக இருந்தது. இது கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது,” என்றார்.
2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகளைப் பார்க்கலாம்.
1. அனைவருக்கும் வீடு என்ற நோக்கில் தொடங்கப்பட்ட பிரதமர் ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகளை மோடி அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
2. மோடி அரசாங்கத்தின் ஆரம்பகால திட்டங்களில் ஒன்றான ஜன்தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் 48.9 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
3. மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.29 லட்சம் கோடி தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
4. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் ஆன் யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ், 80 கோடிக்கும் அதிகமான ஏழை எளியை மக்ககளுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
5. மார்ச் 2023 வரை பிரதமரின் தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதியின் (PM SVANidhi) கீழ் 42.87 லட்சம் வங்கிக் கணக்குகளில் ரூ.5,182 கோடி வழங்கப்பட்டுள்ளது.
6. எஸ்சி மற்றும் எஸ்டி பயனாளிகளுக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7,558 கோடிக்கும் அதிகமான கடன் உதவிகளை மோடி அரசு அளித்துள்ளது.
7. மோடி அரசாங்கத்தின் ஒன்பது ஆண்டுகளில், 28.90 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் E-Shram போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர், இது அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமாக (NDUW) உருவாக்கப்பட்டுள்ளது.
8. பிரதமர் மோடி தனது ஆட்சியின் ஒன்பது ஆண்டுகளில் போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளை கண்டறிந்து ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு ரூ.71,301 கோடி செலவை மிச்சப்படுத்தியுள்ளது.
9. பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13,290 கோடி தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.