
உடல் எடையை குறைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவு பழக்கம், சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் எடையை குறைப்பது சிரமமாக உள்ளது. அதிலும் வயிற்றைச் சுற்றியுள்ள டயர் போன்ற சதையை குறைப்பது குதிரைக் கொம்பாக மாறி வருகிறது. இதை குறைக்கவே முடியாது என்றில்லை. முயன்றால் முடியும்.
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து நல்ல உணவு பழக்கம், நல்ல தூக்கம் போன்றவை எடை குறைக்க முதல்படியாகும். இரண்டாவது வாயடக்கம். ஸ்வீட்ஸ், காபி, டீ பழக்கத்தை கைவிடுவது இரண்டாம் படி. உடற்பயிற்சிகள் மூன்றாம்படி. இந்த மூன்று படிகளும் எடைகுறைப்புக்கு அவசியமானவை. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து வயிற்றுத் தசைகளை வலுவாக்கி தொப்பையை குறைக்க உதவும் இரண்டு ஆசனங்களை இங்கு காணலாம்.
அபானாசனம் (Apanasana) தொப்பையை குறைக்க மட்டுமின்றி பெண்களுக்கு மாதவிடாய் வலியில் இருந்தும் நிவாரணம் தரும். வயிறு, கீழ் முதுகைச் சுற்றி காணப்படும் தேவையற்ற சதையை குறைக்க உதவும். தொப்பக் குறைய நல்ல பயிற்சி. இந்த ஆசனம் செய்வதால் கீழ்நோக்கிய ஆற்றல் ஓட்டமும் உருவாகும். செரிமானத்தைத் தூண்டுகிறது. இந்தப் பயிற்சி ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும்.
இதையும் படிங்க: எடையை குறைக்கும் எளிய வழி.. தினமும் '5' நிமிடங்கள் போதும்!!
இந்தப் பயிற்சியை தொடங்கும் முன் தரையில் படுத்துகொள்ள வேண்டும். பின் நன்கு மூச்சை உள்ளிழுத்து அதனை வெளியிடும்போது முழங்கால்களை மார்பு வரைக்கும் கொண்டு வரவேண்டும். கைகளை மூட்டுகளில் வைத்து கட்டியணைக்க வேண்டும். இந்த ஆசனத்தில் உடலின் மைய தசைகளை உணர வேண்டும். இந்த நிலையில் 10 முதல் 15 வினாடிகள் இருக்கவேண்டும். பாதங்கள் தளர்வாக இருக்கவேண்டும். மூச்சை வெளியிடும்போது முழங்கால்களை மெதுவாக கீழே கொண்டு வர வேண்டும். இப்படி 6 முறை செய்யலாம்.
இதையும் படிங்க: Yoga Tips: படிக்கும் குழந்தைகள் இந்த யோகாசனம் கண்டிப்பாக செய்யுங்கள்... ஆரோக்கியமாக இருப்பீர்கள்..!!
புஜங்காசனம் என்ற ஆசனம் (Cobra Pose) செய்யும்போது மார்பு பகுதி அகன்று காணப்படும். இதனால் ஆழ்ந்த சுவாசம் நடந்து ரத்தத்துக்கு அதிகளவில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகிறது. தொப்பையை குறைக்க இந்த ஆசனம் உதவுகிறது. செரிமானம் மேம்படும். கல்லீரல், சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பு: முதுகு, கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள், ஆஸ்துமா இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் மார்பு, தோள்பட்டைக்கு இணையாக தரையில் வைத்து கொள்ளவேண்டும். கால்கள் தனித்தனியாக இல்லாமல் இணைந்தே இருக்கலாம். ஒருதடவை மூச்சை இழுத்துவிடுங்கள். பின்னர் மூச்சை உள்ளிழுத்தபடியே கைகளை தரையில் ஊன்றியபடி, தலை, மார்புப் பகுதியை மேலே உயர்த்த வேண்டும். உங்களுடைய இடுப்புக்கு கீழே காணப்படும் பகுதிகள் தரையில் இருக்க வேண்டும். மேல் உடலும், தலையும் உயர்த்தப்பட வேண்டும். மேலே நோக்கி பார்க்க வேண்டும். கால் மூட்டுகள் தரையில் தொட்டும்தொடாமலும் இருந்தால் போதுமானது. இந்த நிலையில் மூச்சை நன்கு இழுத்து வெளியேவிடவும். அப்படியே ஒன்று முதல் 15 வரை எண்ண வேண்டும். மூச்சை வெளியே விடும்போது மேல் உடலை மெதுவாக கீழே இறக்கி மீண்டும் குப்புற படுத்துகொள்ளுங்கள். இப்படி 6 தடவை செய்யுங்கள்.