
டேனிஷ் மருந்து நிறுவனமான நோவோ நார்டிஸ்க்கின் வெகோவி (Wegovy) மற்றும் அமெரிக்காவின் எலி லில்லியின் மவுஞ்சாரோ (Mounjaro) ஆகிய இரண்டு ஊசிகள் இந்தியாவில் உடன் பருமன் மேலாண்மைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மருந்துகளுமே எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்கின்றனர். அதற்கு மாற்றாக இந்த மருந்துகள் பார்க்கப்படுகின்றன. இவை இரண்டும் க்ளூகாகன்-போன்ற பெப்டைட்-1 (GLP-1) அகோனிஸ்டுகள் அல்லது GLP-1 மற்றும் GIP (Glucose-dependent insulinotropic polypeptide) இரட்டை அகோனிஸ்டுகள் என அழைக்கப்படும் ஹார்மோன்களை அடிப்படையாகக் கொண்டவை.
(GLP-1) அகோனிஸ்டுகள் நம் குடலில் இருக்கும் இயற்கையான ஹார்மோன்களைப் போலவே செயல்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் ரத்த சர்க்கரை மற்றும் பசியை கட்டுப்படுத்துகின்றன. வெவோகி (Wegovy) மருந்தில் உள்ள செமாக்ளூடைடு என்ற ஒரு பொருள் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. மேலும் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மவுஞ்சாரோ (Mounjaro) என்கிற பெயரில் விற்கப்படும் டிர்செபாடைடு கூடுதலாக GIP ஹார்மோன்களை பிரதிபலிக்கிறது. இது கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டை தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது. இந்த மருந்துகள் எடை குறைப்பு மட்டும் இல்லாமல் இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (Non Alcoholic Fatty Liver), தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
இந்த மருந்துகள் இரண்டு வழிகளில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. மூளையில் உள்ள பசியை கட்டுப்படுத்தும் மையங்களாக செயல்பட்டு பசியை குறைத்து குறைவாக சாப்பிட வைக்கும் மற்றும் இரைப்பையின் காலியாக்கும் வேகத்தை குறைத்து உணவு வயிற்றில் அதிக நேரம் இருக்கும் படி செய்யும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு பசி எடுப்பதில்லை. இந்த ஊசிகள் எடை குறைப்பில் பயனுள்ளதாக இருந்தாலும், பல ஆபத்துகள் மற்றும் பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. இவை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஆனால் மருத்துவ மேற்பார்வை இல்லாமல் இந்த மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி அல்லது வயிறு அசௌகரியம், அஜீரணம், பசியின்மை, சோர்வு, தலைசுற்றல், தலைவலி ஆகியவை இந்த மருந்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படும் லேசான பக்க விளைவுகள் ஆகும்.
அதே சமயம் இந்த மருந்துகள் சில ஆபத்தான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செமாக்ளூடைடு மற்றும் டிர்சுபடைடு ஆகியவை தைராய்டு கட்டிகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் இந்த ஆபத்து உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தைராய்டு புற்றுநோயின் குடும்ப வரலாறு உள்ளவர்கள் இந்த மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த மருந்துகளின் பயன்பாடு கணைய அலர்ஜியை ஏற்படுத்தலாம். கணையம் தீவிரமாக வீங்குவதன் காரணமாக வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். கணைய அலர்ஜியின் அபாயம் அதிகரிக்கும் போது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.
இந்த மருந்துகள் நீரிழப்பு மற்றும் சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் இருப்பவர்கள் இந்த மருந்தை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த ஊசிகள் எடுத்துக் கொண்ட பின்னர் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படலாம். இதன் காரணமாக உடம்புகளில் அரிப்பு, தடிப்புகள், சுவாசிப்பதில் சிரமம், முகம், நாக்கு, தொண்டை ஆகியவற்றில் வீக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இரைப்பையை காலியாக்கும் வேகத்தை குறைப்பதால் ஏற்கனவே இரைப்பை செயலிழப்பு உள்ளவர்களுக்கு நிலைமை மோசமடையலாம். உணவு குறைவாக எடுத்துக் கொள்ளும் காரணத்தினால் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகலாம். இது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். சில ஆய்வுகளில் இந்த மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு, மனநல பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
ஊசிகளை நிறுத்தியவுடன் பலர் இழந்த எடையை மீண்டும் பெறுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இது நிதிச் சுமையை அதிகரிக்கலாம். இந்த ஊசிகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. உடல் எடை குறைப்புக்கான ஊசிகள் அனைவருக்கும் பொருத்தமானவை அல்ல. உடல் பருமன் உடல்நிலை குறியீட்டு எண் (BMI) 30 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள், நாள்பட்ட நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மருத்துவர் உங்கள் உடல் நிலையை மதிப்பிட்டு, பக்க விளைவுகளின் அபாயங்களை கண்காணித்து, அதன் பின்னரே உங்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைப்பார். பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த ஊசிகள் உடன் பருமன் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே. இது நம்பிக்கைக்குரிய தீர்வாக தோன்றினாலும் அதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் மற்றும் நீண்ட கால பக்கவிளைவுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்கத்தில் மாற்றம், வழக்கமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை செய்தால் சிறந்த மற்றும் நிலையான பலன்களை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு மருந்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அதை எடுப்பதற்கு முன்பு தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. இதற்கு ஏசியாநெட் இணையதளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. பக்கவிளைவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம். இதன் பக்கவிளைவுகள், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.