உலகளவில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் மாரடைப்பு 50 வயதிற்கு மேற்பட்டவர்களை தான் அதிகம் பாதித்தது. ஆனால் இப்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது. அதற்குக் காரணம் இதய தசையின் குறிப்பிட்ட பகுதியில் போதுமானளவு ரத்தம் கிடைக்காததால் தான்.
பொதுவாகவே மாரடைப்பு திடீரென ஏற்பட்டு தீவிரமான நிலைக்கு தள்ளும் என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. எப்படியெனில் மாரடைப்பு வருவதற்கு முன் சில மணி நேரங்கள், நாட்கள் வாரங்கள், ஏன் மாதங்களில் கூட நமக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி சுமார் 50 பெண்களிடம் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பெண்களுக்கு தான் ஆண்களை விட வேறுபட்ட அறிகுறிகள் வந்தது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே அவர்களுக்கு சில சகஜமற்ற உணர்வுகளை அனுபவித்ததாகவும் கூறினர். அவை என்னவென்றால், அதிகப்படியான சோர்வு, தூக்கமின்மை, மூச்சு திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைசுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவையே முக்கிய அறிகுறிகள் ஆகும்.
எனவே, இதுபோன்ற அறிகுறிகளை நீங்களும் அனுபவித்தால் உடனே மருத்துவரை சந்தித்து அதற்குரிய பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. மேலும் ஹார்ட் அட்டாக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க இது உங்களுக்கு உதவும்.
மாரடைப்பு ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும், தினமும் நடைபயிற்சி செல்ல வேண்டும், உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்க வேண்டும், எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும், புகை மற்றும் மது பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதனை நீங்கள் முறையாக கடைப்பிடித்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறையும்.