
மேலை நாட்டு கலாச்சாரம் இந்தியாவில் பெருகிவிட்ட நிலையில் பலரும் அந்த நாடுகளின் உணவுகளை விரும்பி உண்கின்றனர். ஆனால் அந்த உணவுகளுக்கு நிகரான அல்லது அதைவிட சத்து மிகுந்த உணவுகள் நம் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. இந்த பதிவில் மேலை நாட்டு உணவுகளைக் காட்டிலும் சத்துக்கள் கொண்ட தமிழ்நாட்டு உணவுகள் குறித்து பார்க்கலாம். புரதச்சத்திற்காக மேற்கத்திய உணவுகளில் சிக்கன், சீஸ், மாட்டிறைச்சி மற்றும் புரதப் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கொள்ளுப் பயிறில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இது உடல் எடையை குறைப்பதற்கும், கொழுப்பை கரைப்பதற்கும் உதவுகிறது. கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளுப் பொடி ஆகியவற்றை சிறந்த மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, உளுந்து போன்ற பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது. சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவற்றில் இந்த பருப்புகளை சேர்க்கும் பொழுது புரதம் தானாக உடலுக்குள் சென்று விடுகிறது. மேலும் கொண்டைக்கடலை, சுண்டல், பச்சைபயிறு, பட்டாணி போன்ற பயிறுகளும் புரதச்சத்து நிறைந்தவையாகும். இவை மாலை நேர சிற்றுண்டியாகவும் உணவில் ஒரு பகுதியாகவும் உண்ணப்படுகின்றன. ஓட்ஸ், பார்லி, கோதுமை போன்ற தானியங்கள் மேற்கத்திய உணவில் நார்ச்சத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் நார்ச்சத்துக்களுடன் தாது உப்புக்களும் நிறைந்துள்ளது. இவற்றைக் கூழ், அடை, களி, தோசை போன்ற வடிவங்களில் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் முருங்கை, அவரை, வாழைத்தண்டு, கத்திரிக்காய் போன்ற தமிழ்நாடு காய்கறிகளிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
மேற்கத்திய உணவுகளில் பால், சீஸ், யோகர்ட் போன்றவை கால்சியத்தின் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. ஆனால் தமிழக உணவில் கேழ்வரகு கால்சியம் சத்து மிகுந்த மிகச்சிறந்த உணவாகும். ஒரு கப் கேழ்வரகில் பால் மற்றும் தயிரை விட அதிக கால்சியம் உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது. கேழ்வரகு களி, தோசை, கூழ், அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிடலாம். அதேபோல் எள் உருண்டையில் அதிக கால்சியம், இரும்புச்சத்து, புரதம் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை போன்ற கீரைகளில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேற்கத்திய உணவுகளில் சால்மன் மீன் மற்றும் ஆளி விதைகள் ஒமேகா-3 க்கு சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கிடைக்கும் வஞ்சரம், சுறா, மத்தி போன்ற கடல் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
மேற்கத்திய உணவில் ப்ரோபயோடிக்கிற்கு யோகர்ட், கிம்சி போன்ற உணவுகள் உதவுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் புளிக்க வைத்த தயிர், மோர், பழைய சோறு ஆகியவை இயற்கையான ப்ரோபயோடிக்ஸ் உணவுகளாகும். இவை குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மேலும் புளிக் குழம்பு, ரசம் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் புளியானது செரிமானத்தை மேம்படுத்துவதோடு இரும்புச் சத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. இப்படியாக மேற்கத்திய உணவுகளை விட அதிக சத்துக் கொண்ட உணவுகள் தமிழகத்தில் உள்ளன. இது மட்டும் அல்லாமல் பிற உணவுகளும் இருக்கின்றன. அது குறித்து சரும நிபுணர் டாக்டர் மோகனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், ஓட்ஸ்க்கு பதிலாக சம்பா கோதுமை அல்லது கம்பு, குயினோவாவுக்கு பதிலாக வரகு அல்லது சாமை, அவகேடோவுக்கு பதிலாக கொய்யா அல்லது நெல்லிக்காய், ப்ளூபெர்ரிஸ்க்கு பதிலாக நாவல் பழம், பிரக்கோலிக்கு பதிலாக காலிஃப்ளவர் அல்லது முட்டைக்கோஸ், ஆலிவ் ஆயிலுக்கு எதிராக நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய், பாஸ்தாவுக்குப் பதிலாக ராகி சேமியா அல்லது கோதுமை சேமியா, சீஸ்க்கு பதிலாக பன்னீர், டார்க் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் அல்லது எள்ளுருண்டை, யோகர்ட்டுக்குப் பதிலாக தயிர், சிரியல்ஸ்க்குப் பதிலாக அவல் உப்புமா அல்லது புட்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.