
ஹைப்பர் டென்ஷன் என்னும் உயர் ரத்த அழுத்தம் பல வகைகளாக பிரிக்கப்படுகிறது. எஷென்ஷியல், நான் எஷென்ஷியல், ஒயிட் கோட் ஹைப்பர்டென்ஷன் என இரத்த அழுத்தத்தில் பல வகைகள் உள்ளது. இதில் ஒயிட் கோட் ஹைப்பர்டென்ஷன் என்பது மருத்துவமனை அல்லது கிளினிக் போன்ற மருத்துவச் சூழலில் ரத்த அழுத்தத்தை அளவிடும் பொழுது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதை குறிக்கிறது. வீடு அல்லது மற்ற சூழல்களில் இவர்களின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்கும். ஆனால் மருத்துவர்களின் வெள்ளை கோட்டை பார்க்கும் பொழுது ஏற்படும் பயம் மற்றும் பதற்றம் காரணமாக ரத்த அழுத்தம் தற்காலிகமாக உயர்வதே ஒயிட் கோட் ஹைப்பர்டென்ஷன் என அழைக்கப்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான தீர்வுகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மருத்துவரை சந்திக்கும் பொழுது ஏற்படும் பதற்றம் பயம் அல்லது அசௌகரியம் ஆகியவை ஒரு தற்காலிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்தநாளங்கள் சுருங்கி, இரத்த அழுத்தம் திடீரென உயர்கிறது. இது ஒரு தற்காலிக நிகழ்வு தான் என்றாலும் நீண்ட காலத்திற்கு உயர் ரத்த அழுத்தமாக மாறுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதற்கென்று தனியான அறிகுறிகள் எதுவும் கிடையாது. ஏனென்றால் இது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே ஏற்படும் நிலையாகும். பெரும்பாலானவர்களுக்கு இது குறித்து தெரிவதில்லை. ஏதாவது மருத்துவ பரிசோதனையின் பின்னரே இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே பலருக்கும் தெரிய வருகிறது.
மருத்துவச் சூழல்கள் பொதுவாகவே சிலருக்கு பதற்றத்தை ஏற்படுத்தும். மருத்துவ பரிசோதனைகள், நோய் கண்டறிதல் பற்றிய பயம், மருத்துவர்களை காணும் பொழுது ஏற்படும் உளவியல் ரீதியான அழுத்தம் ஆகியவை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். சிலருக்கு மருத்துவச் சூழல்கள் எதிர்மறையான அனுபவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக கடந்த காலத்தில் நடந்த வலி மிகுந்த ஊசிகள், சிகிச்சைகள் அல்லது தங்களுக்கு பிரியமானவர்களை மருத்துவமனையில் இழந்தது போன்ற நினைவுகள் ரத்த அழுத்தத்தின் உயர்வைத் தூண்டலாம். இப்படி மன அழுத்தம் ஏற்படும் பொழுது அட்ரினல் போன்ற ஹார்மோன்கள் வெளிப்பட்டு இதய துடிப்பு அதிகரித்து ரத்த அழுத்தம் உயர்கிறது.
சாதாரண ஒருவருக்கு இதயத் துடிப்பின் போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிஸ்டாலிக் பிரஷர் 120 என்றும், டயஸ்டாலிக் பிரஷர் 80 என்றும் இருக்கும். ஆனால் ஒயிட் கோர்ட் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரை பார்க்கும் சமயத்தில் மட்டும் சிஸ்டாலிக் பிரஷர் 130 முதல் 140 என்கிற அளவிலும், டயஸ்டாலிக் பிரஷர் 90 என்ற அளவிலும் அதிகரிக்கலாம். இதன் காரணமாகவே முதல்முறை ஒருவர் மருத்துவரை பார்க்க வரும்பொழுது அவரின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கு வந்து விடமாட்டார். நோயாளிக்கு பிபி அதிகமாக இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு பிற இணை நோய்கள் இருக்கிறதா? என்று மருத்துவர் சோதித்து பார்ப்பார். உடல் எடை அதிகமாக இருந்தால் உடல் எடையை குறைக்க அறிவுறுத்துவார். உணவில் உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது, துரித உணவுகளை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, யோகா, தியான பயிற்சிகளை மேற்கொள்ள மருத்துவர் அறிவுரைகளை வழங்குவார்.
அதேசமயம் முதல் முறை ஒரு நபர் மருத்துவரை சந்திக்க வரும் பொழுது அவருக்கு பிபியின் அளவு 150, 160 க்கும் மேல் இருந்து, சர்க்கரை நோய், இதய நோய்கள், தலைச்சுற்றல், தலைவலி, முதுமை என பிரச்சனைகள் இருந்தால் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இத்தகைய நோயாளிகள் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு வரவழைக்கப்படுவர். அப்போதும் பிபி குறையாமல் இருந்தால் கை கால்களில் செய்யப்படுகிற ஃபோர் லிம்ப் பிளட் பிரஷர் அளவுகளை பரிசோதித்துப் பார்ப்பார். அதன் பிறகு ரத்த பரிசோதனைகள், கொலஸ்ட்ரால், கிரியேட்டின் அளவு ஆகியவற்றை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். ஒயிட் கோரட் ஹைப்பர் டென்ஷன் என்பது ஒரு பயப்பட வேண்டிய பிரச்சனை அல்ல. மேற்குறிப்பிட்ட முறைகளில் அதை அணுகலாம்.
நோயாளிகள் வீட்டில் அமைதியான சூழலில் இருக்கும் பொழுது ரத்த அழுத்தத்தை அளவிடலாம். 24 மணி நேர ஆம்புலேட்டரி ரத்த அழுத்த கண்காணிப்பு முறை ரத்த அழுத்தத்தை அளவிட பயன்படும் துல்லியமான முறையாகும். ஒரு சிறிய கருவி நோயாளியின் உடலில் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்த அழுத்தத்தை அளவிட்டுக் கொண்டே இருக்கும். அன்றாட செயல்பாடுகள் மற்றும் தூக்கத்தின் போது ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது என்பதை இந்த கருவி காட்டும். மருத்துவ சூழலுக்கு வெளியில் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால் ஒயிட் கோட் ஹைப்பர் டென்ஷன் என்பது உறுதி செய்யப்படும். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பொதுவாக மருந்துகள் தேவைப்படாது. இருப்பினும் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பதற்றத்தை குறைப்பதற்கு யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடலாம். தினசரி ரத்த அழுத்தத்தை கண்காணித்து அதை மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம். உடல் எடையை கட்டுக்குள் வைத்தல், வழக்கமான உடற்பயிற்சி, மது அருந்துவதை குறைத்தல், புகை பிடிப்பதை நிறுத்துதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் ரத்த அழுத்த மேலாண்மைக்கு உதவும். ஒயிட் கோட் ஹைப்பர் டென்ஷன் இருப்பவர்கள் எதிர்காலத்தில் உண்மையான ரத்த அழுத்தத்திற்கு ஆளாகக் கூடும். மேலும் இவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயமும் சற்று அதிகம். எனவே இதை சரியாக கண்டறிந்து தேவையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
இதை சரியாக கண்டறியாமல் விட்டால் தேவையற்ற விளைவுகளை சந்திக்க நேரிடலாம். பக்க விளைவுகள் அல்லது தேவையற்ற மருத்துவ செலவுகள் உண்டாகலாம். இதை முற்றிலும் புறக்கணிப்பது ஆபத்தானது. எனவே ரத்த அழுத்தத்தை துல்லியமாக கண்டறிதல் மற்றும் சரியான மேலாண்மை மிகவும் முக்கியம். மருத்துவச் சூழலில் மட்டும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.