
மும்பையைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் கடுமையான உடல் வலி, சோர்வு, மற்றும் ஞாபக மறதி ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ஈய நச்சுத்தன்மை (Lead Poison) இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அலுமினிய குக்கரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. பழைய மற்றும் சேதமடைந்த அலுமினிய குக்கரில் அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சமைக்கும் பொழுது ஈயம் மற்றும் அலுமினிய துகள்கள் உணவில் கலந்து இந்த பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.
பெரும்பாலான பிரஷர் குக்கர்கள் அலுமினியம் அல்லது துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அலுமினியம் என்பது உணவுடன் வினை புரியக்கூடிய ஒரு உலோகமாகும். சில ஆய்வுகளின் படி அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளான தக்காளி, புளி சார்ந்த உணவுகளை அலுமினிய குக்கரில் சமைக்கும் பொழுது சிறிதளவு அலுமினியம் உணவில் கலக்கப்படும். இதன் காரணமாக புற்றுநோய், அல்சைமர் நோய் ஏற்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. நமது அன்றாட உணவுகள், குடிநீர் மற்றும் சில மருந்துகள் மூலமாக நாம் தினமும் அலுமினியத்தை உட்கொள்கிறோம். உடலால் இந்த அலுமினியம் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.
ஆனால் உடலில் அதிக அளவு அலுமினியம் மற்றும் ஈயம் சேரும்பொழுது அது சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். பழைய குக்கரில் உள்ள அலுமினியத்தில் ஈயம் கலந்திருந்தால் அது காலப்போக்கில் உணவில் கலந்து உடலில் சேர்ந்து மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், இனப்பெருக்க மண்டலம் செயல்பாட்டை பாதிக்கும். குழந்தைகளில் இது கற்றல் குறைபாடுகள் மற்றும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். அலுமினிய குக்கர்களை நீண்டகாலமாக தொடர்ந்து பயன்படுத்தி வரும்பொழுது அவற்றின் பாதுகாப்பு பூச்சு தேய்ந்து அலுமினிய துகள்கள் உணவில் கலக்கப்படும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு துருப்பிடிக்காத எஃகு குக்கர்கள் அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்களை பயன்படுத்தலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்கள் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான ஒரு தேர்வாகும். இந்த உலோகம் உணவுடன் வினை புரிவது மிக மிகக் குறைவு. இதனால் உடல் நலக்கோளாறுகளுக்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கர்களால் புற்றுநோய் ஏற்படும் என்கிற கூற்றுக்கு எந்தவிதமான உறுதியான மருத்துவ ஆதாரமும் இல்லை. பிரஷர் குக்கர்களை பயன்படுத்துவதால் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குக்கரின் ரப்பர் கேஸ்கட் தளர்ந்து போவது, பிரஷர் வால்வு சரியாக வேலை செய்யாமல் போவது ஆகிய காரணங்களால் வெடிப்பு அல்லது தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குக்கரை வாங்குவதற்கு முன்னர் ஐஎஸ்ஐ முத்திரை போன்ற தரச் சான்றுகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அலுமினியம் குக்கர்களை தவிர்த்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்களை தேர்வு செய்யுங்கள். குக்கரின் ரப்பர் கேஸ்கட் மற்றும் பிரஷர் வால்வை அவ்வப்போது சோதித்துப் பாருங்கள். அவை சேதமடைந்திருந்தால் உடனடியாக மாற்றி விடுங்கள். குக்கரில் கொள்ளளவுக்கு அதிகமாக உணவு நிரப்புவதை தவிர்த்து விடுங்கள். அளவுக்கு அதிகமாக உணவை நிரப்பினால் வெடிப்பு ஏற்படலாம். ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பிறகும் குக்கரை நன்கு சுத்தம் செய்து விடுங்கள். நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்ட, சேதமடைந்த, கீறல்கள் விழுந்த குக்கர்களை தூக்கி எறிந்து விட்டு புது குக்கரை வாங்கி பயன்படுத்துங்கள்.
பழைய குக்கரை பயன்படுத்துவது என்பது புற்றுநோய் போன்ற ஆபத்தானவற்றை ஏற்படுத்தும் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் மும்பையில் நடந்த சம்பவத்தைப் போல உலோக நச்சுத்தன்மை, வெடிப்பு போன்றவற்றுடன் பல உடல் நலப் பிரச்சனைகளுக்கான அபாயம் அதிகம். எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழைய குக்கரை மாற்றுவது புத்திசாலித்தனமான செயல்.