உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படலாம். மருத்து மாத்திரைகளுடன் பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் எளிதில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.
உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் பொழுது உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பு நிலை, ஹார்மோன் சமநிலை, தைராய்டு, நீரிழிவு இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க மருத்துவர்கள் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை வீட்டிலிருந்தபடியே குறைக்க முடியும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக எப்படி குறைப்பது என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
26
நல்ல கொழுப்புகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க, உணவில் நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்க வேண்டும். பாதாம், வால்நட், ஆளி விதைகள், வெள்ளரி விதைகள், பூசணி விதைகள் ஆகிய நல்ல கொழுப்புகள் நிறைந்த நட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் நட்ஸ்கள் கலவையை சிற்றுண்டி போல சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், ஓட்ஸ், பீன்ஸ்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 25-30 கிராம் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
36
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உணவில் சேர்க்க வேண்டும்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஒமேகா 3 பொதுவாக மீன்கள் மற்றும் ஆளி விதைகளில் அதிகம் காணப்படுகிறது. மீனை எண்ணெயில் வறுக்காமல், குழம்பு போல வைத்து சாப்பிடலாம். வாரம் இருமுறையாவது மீனை உணவில் சேர்க்க வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகள் பூண்டில் அதிக அளவில் இருக்கிறது. தினமும் பூண்டுகளை உட்கொள்வதன் மூலம் தமனிகளில் ப்ளேட்க்கள் உருவாவதை தடுக்கலாம். இரவு படுக்கும் முன்னர் பசும்பாலில் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து அந்த பாலை அருந்தி வரலாம்.
கிரீன் டீ கெட்ட கொழுப்புகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கேடசின் என்னும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கிறது. இது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கப் கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைக்கும் பொழுது உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் எரியத் தொடங்கும். இதன் காரணமாக உடல் எடை குறைவதோடு, கெட்ட கொழுப்பின் அளவும் குறைகிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
56
தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு ஸ்பூன் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
66
லிப்பிட் ப்ரொஃபைல் டெஸ்ட்
உடலில் கொழுப்புகளின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும். எனவே லிப்பிட் ப்ரொஃபைல் எனப்படும் கொழுப்புகளின் அளவை கணக்கிடக் கூடிய மருத்துவ பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது செய்து கொள்ளுங்கள். கட்டுபாடற்ற கொழுப்பு அளவு இருப்பவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளோடு இந்த முறைகளையும் பின்பற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் மருந்துகளை சுயமாக நிறுத்துதல் கூடாது.