நீரிழிவு நோயைத் தடுக்க மிகவும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். உடல் ரீதியாக அதிக சுறுசுறுப்பாக இருப்பதும் அவசியம். உங்களுக்கு நிரீழிவு நோய் இருந்தால் வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வது, நரம்பு, சிறுநீரகம், இதய பாதிப்பு ஆகிய பாதிப்புகளில் இருந்தும் உங்களை காக்கும். அமெரிக்காவை சேர்ந்த நீரிழிவு சங்கத்தின் சமீபத்திய சர்க்கரை நோய் தடுப்பு உதவிக்குறிப்புகளை இங்கு காணலாம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி உங்கள் எடையை இழக்க மட்டுமல்ல, இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. உடற்பயிற்சிகள் இன்சுலினுக்கான உணர்திறனை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை சாதாரண வரம்பிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம். நார்ச்சத்து உணவுகள் இதய நோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்கும். நார்ச்சத்து உணவுகளில் பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், முழு தானியங்கள், நட்ஸ் ஆகியவை அடங்கும்.
எடை குறைப்பு
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைப்பதில் மிகவும் கவனிக்க வேண்டியது, உடல் எடைதான். சர்க்கரை வியாதி உடையவர்கள் அதிக எடையோடு இருக்கக் கூடாது. ஒரு ஆய்வில் தொடர் உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்தவர்கள் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை கிட்டத்தட்ட 60 சதவிகிதம் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.