இனிப்புகள் சாப்பிடுவதும், மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே ரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது. தினசரி வாழ்வில் நாம் அலட்சியமாக இருக்கும் பத்து விஷயங்களும் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம்.
தினசரி வாழ்வில் நாம் கவனிக்காத பல விஷயங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உயர்த்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க விரும்புவார்கள் பின்வரும் பத்து காரணங்களை கவனிக்க வேண்டும். அதில் முதலாவது தூக்கமின்மை. சரியாக தூங்காதவர்களுக்கு கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை அளவு உயர்கிறது. தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். மன அழுத்தம் அதிகரிப்பதால் வெளிப்படும் ஹார்மோன்கள் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன. எனவே தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டும்.
25
நீர்ச்சத்து மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகள்
உடலுக்குத் தேவையான அளவு நீர்ச்சத்து கிடைக்கவில்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகலாம். சிறுநீரகம் அதிகப்படியான குளுக்கோசை வெளியேற்ற முடியாமல் போகலாம். எனவே ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிக வியர்வை வெளியேறுவதால் அந்த சமயத்திலும், கோடைக் காலத்திலும் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். நாம் பிற நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஸ்டீராய்டுகள், டையூரிக் மருந்துகள், பீட்டா பிளாக்கர்ஸ், கருத்தடை மாத்திரைகள் கூட சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். எனவே மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இது போன்ற மருந்துகளை பயன்படுத்துதல் கூடாது.
35
காலை உணவு மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள்
காலை உணவை தவிர்ப்பது கண்டிப்பாக கூடாது. காலை உணவை தவிர்க்கும் போது அது இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்க செய்து, ரத்த சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தலாம். எனவே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக புரதம், நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். உணவில் செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இவை நேரடியாக சர்க்கரையை உயர்த்தாவிட்டாலும் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை மாற்றி காலப்போக்கில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை பாதிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே செயற்கை இனிப்பூட்டிகளை கைவிட வேண்டும். இனிப்பு தேவை (Sugar Craving) ஏற்படும் பொழுது பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
புரோட்டின் பவுடர்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று சந்தைகளில் விற்கப்படும் உணவுகளில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். புரோட்டின் பார்கள், சாலட் டிரெஸ்ஸிங் போன்ற உணவுகளிலும் சர்க்கரைகள் இருக்கலாம். எனவே அதன் லேபிளை படித்து பார்த்து அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து பின்னர் வாங்க வேண்டும். காய்ச்சல், சிறுநீர் பாதை தொற்று போன்றவையும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே உடல்நிலை சரியில்லாத சமயத்தில் ரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டியது அவசியம்.
55
மருத்துவ ஆலோசனை தேவை
பெண்களுக்கு மாதவிடாய் காலம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) போன்ற காலங்களில் ஹார்மோன்களில் ஏற்படும் சமநிலையால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எனவே இது போன்ற சமயங்களில் பெண்கள் அடிக்கடி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மிதமான உடற்பயிற்சிகள் சர்க்கரை அளவை குறைக்கும். ஆனால் மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் தற்காலிகமாக ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம். கடுமையான உடற்பயிற்சியின் போது அதிக ஆற்றலுக்காக கூடுதல் குளுக்கோஸ் தேவை ஏற்படலாம். எனவே தீவிரமான உடற்பயிற்சியை விடுத்து மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மேற்குறிப்பிட்ட காரணிகள் பொதுவானவை என்றாலும் ஒவ்வொருவரின் உடல்நலனைப் பொருத்தும் இவை மாறுபடலாம். எனவே உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.