
சர்க்கரை நோய் என்பது வளர்ச்சிதை மாற்ற குறைபாடுடன் தொடர்புடையது. கணையத்தில் இன்சுலின் போதுமான அளவு சுரக்காவிட்டாலோ அல்லது அறவே சுரக்காமல் நின்று போனாலோ ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் தசைகளுக்கு சர்க்கரை சென்று சேராமல், சேரக்கூடாத ரத்தத்தில் சர்க்கரை சேர்கிறது. இன்சுலின் ஹார்மோனின் செயல் திறனை தாண்டி உடலில் அதிகமாக சர்க்கரை சத்து உருவாகுவது, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை ஆற்றலாக மாற்ற இயலாதது, இன்சுலின் தனது செயல் திறனை இழப்பது ஆகியவை டைப் 2 டயாபடீஸ் எனப்படுகிறது. இந்த வகை நீரிழிவை சித்த மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று திருப்பத்தூரை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் கணையத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக மாற்ற முடியும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தின் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் ரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நாட வேண்டும் என கூறியுள்ளார். அதாவது ரத்த சர்க்கரைக்கு ஒருங்கிணைந்த மருத்துவத்தின் மூலம் தீர்வு கண்டு, கட்டுக்குள் வந்தவுடன் சித்த மருந்துளின் உதவியோடு அதனை தக்க வைத்துக் கொள்ளலாம், எந்த மருத்துவம் மேற்கொண்டாலும் சர்க்கரை அளவை குறைப்பது அல்லது கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இலக்காக இருக்க வேண்டும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் வேறு பின் விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் நாவற்பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தும் சூரணம் கொடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்து என மருத்துவர் விளக்கியுள்ளார். இது சர்க்கரை நோயால் ஏற்படும் அதிக தாகத்தை குறைப்பதோடு, இதன் துவர்ப்பு சுவை அதிக சிறுநீர் வெளியேறுவதைம் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் ஏழு மூலிகைகள் சேர்த்து செய்யப்படும் ஆவாரை குடிநீர் சூரணம் சித்த மருத்துவ கோட்பாட்டின்படி இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் என்றும் இப்படி துவர்ப்பு சுவை கொண்ட பொருட்களை நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுப்பதன் மூலம் கை கால் எரிச்சலையும் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மதுமேக சூரணம் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்து என்றும், இது அனைத்து சித்த மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும் என்று மருத்துவர் விக்ரம் குமார் கூறியுள்ளார். மேலும் திரிபலா சூரணம், வில்வ இலை மாத்திரை, சர்க்கரை கொல்லி இலையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து என நீரிழிவு நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் இருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் வெந்தயம் சாப்பிடுவது போன்ற விஷயங்களும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்றும், ஆனால் இவை மட்டுமே முழுமையான தீர்வாகாது என்பதை கவனத்தில் கொண்டு மருந்துகளுடன் இவற்றை கூடுதலாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்கள் மற்றும் சித்த மருத்துவரின் அறிவுரையின் பெயரில் எழுதப்பட்டவை மட்டுமே. இதன் பலன்கள் மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. எக்காரணம் கொண்டும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் மருந்து மாத்திரை நிறுத்துதலோ அல்லது சுய மருத்துவம் செய்தலோ கூடாது. ஒவ்வொருவரின் உடல் நலனும் வேறுபடும் என்பதால் எந்த ஒரு மருத்துவத்தை தொடங்குவதற்கு முன்னரும் உங்களுடைய தனிப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது.