
இரத்த வகைகள் குறித்த தொடர் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 47 வகையான அங்கீகரிக்கப்பட்ட இரத்த குழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்களால் புதிய வகை ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள குவாடெலூப் தீவைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணிடம் 2011 ஆம் ஆண்டு இந்த ரத்த வகை கண்டறியப்பட்டது. ஒரு அறுவை சிகிச்சைக்காக அவருடைய இரத்தத்தை பரிசோதித்த போது அந்த இரத்தம் எவருடனும் பொருந்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 15 வருடங்கள் ஆராய்ச்சி நடத்திய பின்னர் 2025 ஜூன் மாதம் இது அதிகாரப்பூர்வமாக புதிய வகை இரத்த வகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்த வகை உலகிலேயே இந்த ஒரு பெண்ணிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குவாடெலூப் பகுதியின் உள்ளூர் புனைப் பெயரான க்வாடா என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ரத்த வகைக்கு ‘க்வாடா நெகட்டிவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நெகடிவ் என்பது ரத்தத்தில் குறிப்பிட்ட ஒரு ஆன்டிஜன் இல்லாததை குறிக்கிறது. இ.எம்.எம் ஆண்ட்டிஜன் என்பது பொதுவாக அனைத்து மனிதர்களின் இரத்தத்திலும் காணப்படும் ஒரு ஆன்டிஜன் வகையாகும். இது மனிதர்களின் இரத்த சிவப்பணுக்களில் காணப்படுகிறது. இந்த ஆன்டிஜென் அந்தப் பெண்ணின் ரத்தத்தில் இல்லாததால் அவருக்கு அவருடைய சொந்த இரத்தத்தை மட்டுமே ஏற்ற முடியும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.
இந்த இரத்த வகையானது ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மரபணு திரிபு அவரது பெற்றோர்களிடமிருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சிவப்பணுக்களின் மேற்பரப்பில் புரதங்கள் பிணையும் விதத்தை இது முழுவதுமாக மாற்றி விடுகிறது. ஒரு வேளை இவருக்கு அவசரமாக இரத்த உதவி தேவைப்பட்டால் அது மிகவும் சவாலான காரியமாகும். இவரது ரத்தத்தில் இ.எம்.எம் ஆன்டிஜென் இல்லாததால் இ.எம்.எம் கொண்ட இரத்தத்தை ஏற்றும் பொழுது அவரது உடல் அதை அந்நிய பொருளாக கருதி கடுமையான எதிர் வினைகளை உண்டாக்கலாம். எனவே அவரது சொந்த இரத்தத்தை சேமித்து வைப்பதன் மூலம் மட்டுமே அவருக்கு இரத்தப் பரிமாற்றம் செய்ய முடியும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் பல சவால்களை உருவாக்கியுள்ளது. அரிய இரத்தக் குழுக்களைப் பற்றிய புரிதலை மேலும் விரிவு படுத்துகிறது. புதிய அரிய இரத்த வகைகளை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறைகளை ஆராய்வதற்கான வழிகளை இது தூண்டுகிறது. மேலும் உலக அளவில் இருக்கும் இரத்த வங்கிகளில் பல்வேறு இனக் குழுக்களின் இரத்த மாதிரிகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த கண்டுபிடிப்பு வலியுறுத்துகிறது. இதே இரத்த வகையுடன் குவாடெலூப் தீவில் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதை கண்டறியும் பணியும் துவங்கியுள்ளது.
இரத்த வகையை மாற்றி உள் செலுத்துவது சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாக அமையும். இந்தியாவில் இருக்கும் அரிதான இரத்தமான பாம்பே குரூப் வகையில் எச் ஆன்டிஜென் இருக்காது. ஆனால் மற்ற இரத்த வகைகளில் எச் ஆன்டிஜென் உண்டு. எனவே இது போன்ற அரிதான இரத்த வகை கொண்டவர்களுக்கு இரத்தம் செலுத்தும் போது மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற இரத்த வகையை கொண்டவர்களுக்கு தங்களுக்கு தாங்களே இரத்தம் செலுத்திக் கொள்ளும் முறையும் உள்ளது. இவர்கள் தங்களது இரத்தத்தை தானமாக அளித்து சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். இரத்தத்தின் வெவ்வேறு கூறுகளை தனித்தனியாக சேமித்து வைக்கவும் முடியும். சில கூறுகளை ஓராண்டு காலம் வரை சேமிக்க முடியும்.