
கடந்த 2011இல் செய்யப்பட்ட ஆய்வில் தினமும் யோகாசனம் செய்தால் மன அழுத்தம் குறைவது தெரியவந்தது. சுவாச பயிற்சி, உடல் நெகிழ்வுத்தன்மை, கவனம் போன்றவை மன அழுத்த ஹார்மோன்கள் சுரப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் நாள்பட்ட மன அழுத்தத்தை அலட்சியபடுத்தினால் இதய செயல்பாட்டில் மோசமான பாதிப்பை உண்டாக்கும். மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல், அட்ரினலின் ஆகியவை சுரக்கின்றன. இதனால் படபடப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய வீக்கம், இதய துடிப்பு சீரற்ற நிலை ஆகிவை ஏற்படும். இதுவே இதய பாதிப்புகளுக்கு காரணமாகின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்ய வேண்டிய ஆசனங்களை இங்கு காணலாம்.
இந்த ஆசனம் மன அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. டவுன்வர்ட் டாக் பொசிஷன் (downward dog position) அல்லது அதோ முக ஸ்வானாசனம் தோள்கள், கழுத்து, முதுகில் இருக்கும் இறுக்கத்தை விடுவித்து தளர்வை தரும். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். கால்களையும், கைகளையும் தண்டால் செய்யும் நிலையில் தரையில் ஊன்றி கொள்ளுங்கள். பின் மெல்ல உடலை உள்நோக்கி வளைத்து ஒரு கோபுரம் போல நின்று, வயிற்றுதசையில் இயக்கத்தை அளியுங்கள்.
சேது பந்தசனா என சொல்லப்படும் பிரிட்ஜ் போஸ் (bridge pose) இதயத்திற்கு நல்ல பலன்களை தருகிறது. இந்த ஆசனம் மார்பு பகுதியை நன்கு செயல்படுத்துகிறது. மன அழுத்தம் குறைக்கும் சிறந்த ஆசனம். உயர் இரத்த அழுத்தத்தைக் சீராக வைக்க உதவி இதய நோய் வாய்ப்புகளை குறைக்கிறது. இந்த ஆசனம் செய்யும்போது மார்பு, இடுப்பு பகுதிகளை தரையில் இருந்து மேல்நோக்கி தூக்குவதால் இதயத்தில் உள்ள பதற்றம் நீங்கும்.
பாலாசனம் அல்லது சைல்ட் போஸ் (child pose) செய்யும்போது மனம் ஒருநிலைபடுத்தப்படுகிறது. எளிமையான ஆசனம். மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியூட்டும் நல்ல ஆசனம். பதட்டத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முதுகு, கழுத்தில் தளர்வை ஏற்படுத்தி பதற்றத்தை குறைக்கும். குழந்தை தரையில் குப்புற படுப்பது போல படுங்கள். அப்போது மார்பில் முழங்கால்கள் படும்படி வைத்து கொள்ளுங்கள். கைகளை முன்னோக்கி வைத்து உடலை நீட்டுங்கள். அவ்வளவுதான்!
இதையும் படிங்க: ஆரோக்கியமற்ற தொப்பையை குறைக்கும் '2' ஆசனங்கள்!!
விருக்ஷாசனம் உடலில் சமநிலையை உருவாக்கக் கூடிய அற்புதமான ஆசனமாகும். இதை செய்வதால் மனத் தெளிவு, உணர்ச்சி நிலைத்தன்மை கிடைக்கிறது. விருக்ஷ என்பதற்கு மரம் என அர்த்தம். பார்ப்பதற்கு இந்த ஆசனம் மரத்தின் வடிவத்தை போலவே இருக்கும். கைகளை மேலே உயர்த்தி ஒரு காலை தொடையின் பக்கவாட்டில் வைத்து மூச்சை இழுத்துவிட வேண்டும். உடலை சமநிலைபடுத்தி மனதை ஒருநிலைபடுத்துவதால் பதட்டம், மன அழுத்தம் சீராக குறைவதை உணரலாம். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
இதையும் படிங்க: மூளையை '1' நிமிடத்தில் சுறுசுறுப்பாக்கும் 'சூப்பர்' யோகா தெரியுமா?
சவாசனம் பார்க்க எளிமையாக இருக்கும். இறந்த பிணம் போல கை, கால்களை நீட்டி படுக்கவேண்டும். ஆழமான சுவாசத்தை கடைபிடிக்க வேண்டும். கைகளை உடலோடு வைக்கவேண்டும். வேறு எந்த அசைவும் தேவையில்லை. கால்கள் தளர்வாக இருக்கட்டும். மன அழுத்தத்தைக் குறைக்க, இதயத்தை அமைதிப்படுத்த சிறந்த ஆசனமாகும்.
யோகாசனங்களை சரியான தோரணையில் செய்வது அவசியம். அதனால் முறையாக நிபுணரிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்வதாக இருந்தால் பயிற்சி பெற்ற யோகாசன நிபுணர்களின் காணொளிகளை பின்பற்றி செய்யுங்கள்.