தினமும் 18 நிமிடங்கள் யோகா செய்வது மனஅழுத்தத்தை குறைத்து, கார்டிசோல் அளவை சீராக வைத்திருக்க உதவலாம். யோகாவுடன் நல்ல தூக்கம், சத்தான உணவு, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் சேர்த்தால் மனநலம் மேம்படலாம்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் வேலைப்பளு, தூக்கமின்மை, பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் மனஅழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றுடன் யோகாவும் முக்கியமான வழியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தினமும் சுமார் 18 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வது உடலில் மனஅழுத்தத்துடன் தொடர்புடைய கார்டிசோல் அளவை குறைக்க உதவக்கூடும் என்ற கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க மனநல மருத்துவர், யோகா உடலுக்கு மட்டுமின்றி மனதையும் பயிற்றுவிக்கும் முறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
25
யோகா மனதை எப்படி அமைதிப்படுத்துகிறது?
யோகா என்பது ஆசனங்களை மட்டும் உள்ளடக்கிய பயிற்சி அல்ல. இதில் யோகாசனங்கள், மூச்சைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமம் மற்றும் தியானம் போன்ற முறைகள் இணைந்துள்ளன.
தொடர்ந்து யோகா செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதுடன், மனதை அமைதியாகவும் நிலையாகவும் வைத்திருக்க உதவக்கூடும். மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் பதற்றத்தை கட்டுப்படுத்தவும் இது துணையாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
35
18 நிமிட யோகா உண்மையில் போதுமா?
18 நிமிட யோகா மனஅழுத்தத்தை குறைக்க உதவக்கூடும் என்ற கருத்து கவனம் பெற்றாலும், 18 நிமிடங்கள் மட்டுமே அனைவருக்கும் போதுமானது என்று கூற முடியாது.
நிபுணர்களின் கருத்துப்படி, மனஅழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க தினசரி 40 நிமிடங்களுக்கும் அதிகமாக யோகா செய்வது பயனுள்ளதாக இருக்கலாம். அதே நேரத்தில் ஒருவரின் வயது, உடல்நிலை, உடற்பயிற்சி பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா மட்டும் போதுமானதாக இருக்காது. சத்தான மற்றும் சமச்சீர் உணவு, தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம், தொடர்ந்து உடல் இயக்கம் ஆகியவையும் முக்கியம்.
மேலும் தியானம் மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற மனநலப் பயிற்சிகளை தினசரி பழக்கமாக்குவது மனஅழுத்தத்தை நிர்வகிக்க உதவலாம்.
55
தினசரி பழக்கமாக்குவது முக்கியம்
ஒரு நாளில் மட்டும் யோகா செய்வதைவிட, அதை தொடர்ந்து செய்யக்கூடிய தினசரி பழக்கமாக மாற்றுவது முக்கியமானதாகும். ஆரம்பத்தில் குறைந்த நேரத்தில் எளிய ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகளுடன் தொடங்கி, உடலின் திறனுக்கேற்ப நேரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம்.
யோகா தொடங்குபவர்கள் தங்களது உடல்நிலைக்கு ஏற்ற பயிற்சிகளைத் தேர்வு செய்வது அவசியம். ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், புதிய உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவர் அல்லது தகுதியான பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.