சமீபகாலமாக மாரடைப்பால் மக்கள் நிலைகுலைந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தெலங்கானா மாநிலம், மஹ்பூபாபாத்தில் உள்ள மரிபெடா மண்டல் எனும் அப்பைபாலம் கிராமத்தில் நேற்று (மார்ச்.31) அதிகாலை 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரவந்தி (13). வீட்டிற்கு இரண்டாவது செல்ல மகள். ஆறாம் வகுப்பு மாணவியான ஸ்ரவந்தி, வியாழக்கிழமை இரவு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார். குடும்பத்தினர் ஸ்ரவந்தியை மருத்துவரிடம் அழைத்து செல்வதற்குள் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வியாழன் இரவு விளையாடி விட்டு இயல்பாக தூங்க சென்றுள்ளார் ஸ்ரவந்தி. கொஞ்ச நேரம் தூங்கியுள்ளார். சுமார் 12.30 மணியளவில் சிறுமிக்கு இதயத்தில் வலி ஏற்பட்டது. கடுமையான சுவாசப் பிரச்சனையும் வரவே, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவரிடம் அழைத்து செல்ல வீட்டில் உள்ளவர்கள் ஆட்டோவை ஏற்பாடு செய்வதற்குள், அதிகாலை 1 மணியளவில் சிறுமி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமியின் மாமா அவளுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அது பலனளிக்கவில்லை.