வீட்டில் வைக்கப்படும் மருத்துவ குணம் உள்ள செடிகள் ஜலதோஷம், வயிற்றுவலி, தலைவலி, காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்தவும், முடி, சரும ஆரோக்கியத்தை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாமல் பேணவும் பயன்படுகிறது. உங்கள் வீட்டில் ஆயுர்வேத செடிகளை நட நினைத்தால் எந்தெந்த செடிகளை வீட்டு தொட்டிகளில் நட்டு வளர்க்கலாம் என இங்கு காணலாம்.
துளசி
பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் உபயோகம் ஆகும் துளசி செடி, வளிமண்டலத்தை சுத்தப்படுத்தும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உடையது. சளி, இருமலை குணப்படுத்த உதவும். துளசி இலைகளில் வைட்டமின்-சி, கால்சியம், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சில துளசி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அந்த நீரை குடித்தால் நன்மைகள் கிடைக்கும். கொஞ்சம் தேன் சுவைக்கு சேர்க்கலாம்.
புதினா
புதினாவில் இருக்கும் மெந்தோல் சளி, மூக்கடைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றை போக்கும். சரும நோய்களை நீக்கும். சாப்பிட்ட பிறகு புதினா தண்ணீர் குடித்தால் செரிமானம் மேம்படும். புதினா தேநீர் போட்டு குடித்தால் மனநிலை மேம்படும். வயிற்று வலி, சோர்வு, ஜலதோஷம் போன்றவை குணமாகும். சில புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, காலையில் குடித்தால் எல்லா நோய்க்கும் எதிராக போராட முடியும்.
வேப்ப மரம்
வேப்பங்குச்சி பல்வலியைப் போக்கும். ஈறு பிரச்சனைகளை தடுக்கும். வேப்ப இலைகளின் சாறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்த இலைகளின் சாறு உடலை குளிர்ச்சியாக வைக்கும். சிறுநீரக நோய்களுக்கு நல்லது. தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். செரிமானத்தை மேம்படுத்தும். உடல் சோர்வை நீக்கும். நீரிழிவு நோய்க்கு உதவும்.
இந்த மருத்துவ குணமுள்ள செடிகளை வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்.
இதையும் படிங்க: நம் மனதை எப்படி புரிந்து கொள்வது? புத்தர் கூறிய 5 நிலைகள்!!