ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு நோற்று அல்லாஹ்வை வணங்குகிறார்கள். இந்த நோன்பை கடைபிடிப்பவர்கள் ஒரு நாளுக்கு 2 முறை மட்டுமே ஏதாவது சாப்பிடுவார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, ரம்ஜான் காலத்தில், நோன்பு நோற்பவர்கள் சில தவறுகளை செய்யக்கூடாது. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் செய்யும் தவறுகள் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கின்றன. அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி எந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
நோன்பு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் நாள் முழுவதும் தங்கள் குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினம். ஆகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை தொடர்ந்து பரிசோதிப்பது அவசியம். நோன்பு இருக்கும்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில குறிப்புகளை பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் எச்ஓடி மற்றும் எண்டோகிரைனாலஜிஸ்ட் (HOD and Endocrinologist) டாக்டர் சி.எஸ் துவாரகநாத் நமக்கு சொல்கிறார்.
1. ஓட்ஸ், சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு மாதிரியான அதிக ஆற்றலை தரும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மீன், பனீர், நட்ஸ் ஆகிய புரதங்களையும் உட்கொள்ளலாம். நிறைய திரவங்களை எடுத்து கொள்ளலாம். ஆனால் காபி, குளிர்பானம் போன்ற சர்க்கரை அல்லது அதிக காஃபின் உள்ள பானங்களை தவிர்க்கவும்.
2. பாரம்பரியமாக பேரீச்சம்பழம் மற்றும் பாலுடன் நோன்பை திறப்பார்கள். நோன்பு சமயங்களில் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ளுங்கள். இனிப்பு, வறுத்த அல்லது எண்ணெய் உணவுகளை கொஞ்சமாக சாப்பிடுங்கள். ஏனென்றால் இவை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். தூங்க செல்வதற்கு முன் பழங்களைச் சாப்பிடுவது, விடியும் வரை சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.
3. உடல் செயல்பாடுகளை தவறாமல் செய்யவேண்டும். அதாவது உடற்பயிற்சி கட்டாயம். கூடுதல் சிரமம் தவிர்க்க நடைபயிற்சி, யோகா செய்யலாம். இது உடல் வலிமையை அதிகரிக்க உதவும்.
4. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் முக்கியம். அதிகாலை உணவு ஆற்றலைத் தக்கவைக்க முக்கியம். ரமலான் மாதம் நோன்பின்போது போதுமான தூக்கம் பெறுவதும் முக்கியம். சரியாக தூங்காவிட்டால் பகலில் பசி அதிகமாகும். நல்ல தூக்கம் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது, இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியமானது.