கேரளாவின் முதல் திருநம்பி 'பாடி பில்டர்' தற்கொலை.. பேஸ்புக்கில் போட்ட கடைசி பதிவு!!

First Published | May 5, 2023, 12:37 PM IST

திருச்சூர்: கேரளாவின் முதல் திருநம்பி பாடி பில்டர், 'மிஸ்டர் கேரளம்' பட்டம் வென்ற பிரவீன்நாத் தற்கொலையால் உயிரிழந்தார். 

கேரள மாநிலம் பாலக்காடு, எலவாஞ்சேரியைச் சேர்ந்த பாடி பில்டர் பிரவீன்நாத். இவர் 2021ஆம் ஆண்டில் திருநம்பிகளுக்கான பாடி பில்டர் போட்டியில் கலந்து கொண்டு `மிஸ்டர் கேரளம்’ பட்டம் பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டான 2022ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டர் போட்டியில் இறுதி வரை சென்றார். கேரள மாநிலத்தினுடைய முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற புகழுக்கு சொந்தக்காரராக திகழ்ந்த பிரவீன்நாத்தும், 'மிஸ் மலபார்' பட்டம் வென்ற மாடல் திருநங்கை ரிஷானா ஐஷுவும் காதலித்து வந்தனர். 

ஐஷு கேரளாவின் கோட்டக்கல்லைச் சேர்ந்தவர். இவர் திருச்சூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வெகுநாள்களாக காதலித்த பிரவின்நாத்தும் ஐஷுவும், கடந்த காதலர் தினத்தில் இருவீட்டார் சம்மத்துடன் நண்பர்கள் உறவினர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர். இனிதே திருமணம் நடந்து இருவரும் புது வாழ்க்கையை தொடங்கினர். அவரவர் துறையில் முன்னேறும் துடிப்புடனும் இருந்தனர்.

Tap to resize

அண்மைகாலங்களில் பிரவின்நாத், ரிஷானா ஆகிய ஜோடிக்கு இடையே ஏதோ மனக்கசப்பு இருப்பதாகவும், அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பிரிய உள்ளதாகவும் தகவல்கள் பரவின. சமூக வலைதளங்களில் பரவிய சில தகவல்களில், அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல்களை பிரவின்நாத் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மறுத்திருந்தார். அவை பொய்யான தகவல்கள் என்றும் கூறினார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,"என் மனைவியும் நானும் திருமண உறவில் இருந்து பிரிந்ததாக ஆன்லைன் மீடியா தகவல்களை வெளியிடுகின்றன. அப்படி நாங்கள் பிரியவில்லை. இன்னும் ஒன்றாக வசித்து வருகிறோம். நாங்கள் பிரிந்ததாக வெளியிட்ட பதிவை 1 மணி நேரத்தில் அழித்துவிட்டேன். அது எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும். அதை எப்படி நீங்கள் கொண்டாடுகிறார்கள் என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இனிமேல் அப்படி செய்திகளை வெளியிடாதீர்கள். நாங்கள் இணைந்து வாழப் போகிறோம்"என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த தெளிவான பதிவுக்கு பின்னர் தான் அந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருச்சூர் பூங்குந்நத்தம் பகுதியிலுள்ள வீட்டில் பிரவின்நாத் விஷம் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார். தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பெற்றோர் அட்சதை தூவ திருமணம் செய்த திருநர் ஜோடி.. காதலர் தினத்தன்று கேரளாவில் ருசிகரம்!

இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனக்கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேரள முதல்வர் மற்றும் டிஜிபியிடம் திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். தன் காதல் கணவரின் மரணத்தால் மனமுடைந்த ஐஷுவும் கரப்பான் பூச்சி மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடந்து வருகிறது.

Latest Videos

click me!