இந்திய மக்களுக்கு அரிசி முக்கிய உணவாக இருக்கிறது. ஒரு நாளில் கொஞ்சமாவது அரிசி உணவை உண்பது தான் பலருக்கும் திருப்தியான உணர்வை கொடுக்கும். ஆனால் அதிகமான அரிசி உணவை நாம் சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு என்று பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. ஏனென்றால் அரிசியில் தான் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளன.
அரிசி உணவை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது. அதனால்தான் மருத்துவர்களே அரிசி உணவை அளவாக உண்ண அறிவுறுத்துகின்றனர். இது போன்ற காரணங்களுக்காக அரிசி உணவை அப்படியே ஒதுக்கிவிட்டு, நம் உணவு பழக்கத்தை மாற்றவும் முடியாது. ஒருவேளை நாம் தொடர்ந்து அரிசி உணவை சாப்பிடாவிட்டால், நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.
ஒரு மாதம் தொடர்ந்து அரிசி உணவை நாம் தவிர்த்தால் உடலில் கலோரிகள் கணிசமாக குறைந்து எடை குறைய வாய்ப்புள்ளது. நாம் கார்போஹைட்ரேட் உண்ணாத காரணத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூட கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ஆனால் இந்த எடை குறைப்பு முயற்சியில் அரிசி தவிர மற்ற தானியங்களையும் அல்லது அதே அளவிலான கலோரிகளை அளிக்கும் மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளையும் நாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.
அரிசி உணவை நாம் தவிர்த்து விட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு நிச்சயம் சமநிலையில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மறுபடியும் அரிசி உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கொஞ்சமாக அரிசி உணவை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு செய்யாது. முற்றிலும் அரிசி உணவை சாப்பிடாமல் தவிர்த்தால் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி, சில தாதுக்கள் நமக்கு கிடைக்காமல் போகலாம்.
ஒரேயடியாக அரிசி உணவை தவிர்ப்பது நல்லதல்ல. அரிசி உணவுடன் புரதச்சத்து கொண்ட உணவுப் பொருட்கள், பச்சைக் காய்கறிகளை சேர்த்து உண்பதன் மூலமாக அதை சத்தான உணவாக மாற்ற முடியும்.
அரிசியில் காணப்படும் கார்போஹைடிரேட்டுகள் நம் உடலின் ஆற்றலுக்கு தேவை. அதை ஒதுக்கிவிட்டால் நம்மை பலவீனமாக மாற்றும். இதனால் தசைகள் வலுவிழக்கும். உடலில் ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு வர வாய்ப்பு ஏற்படலாம். உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பது தான் நோக்கமாக கொள்ள வேண்டும். தசைகளை பலவீனமாக்கக் கூடாது. அதனால் அவ்வப்போது அரிசி உணவை அளவாக எடுத்துக் கொள்ளுங்கள் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் பலா, மாம்பழத்தைக் கண்டிப்பாக தவிர்க்கணுமா? டாக்டர் என்ன சொல்றாங்கனு பாருங்க!!