
தேனியின் மண்ணுக்கே உரிய உணவுச் சுவையை நினைத்தாலே நாவில் எச்சில் ஊறுகிறதா? அப்படியானால், தேனி ஸ்பெஷல் பருத்திப்பாலை ஒருமுறை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
பருத்தி விதையின் தனித்துவமான சுவை, தேங்காயின் மணம், ஏலக்காயின் நறுமணம், வெல்லத்தின் இனிப்பு என அனைத்தும் ஒன்றாகக் கலக்கும் இந்தப் பாரம்பரிய பானம், சுவை விரும்பிகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
வழக்கமாகக் குடிக்கும் டீ, காபி, பால் ஆகியவற்றைத் தாண்டி, புதிதாக ஏதாவது ருசிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், தேனி ஸ்டைல் பருத்திப்பால் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வு. மாலை நேரத்தில் சூடாகப் பரிமாறினாலும், விருந்தினர்களுக்குப் பாரம்பரியமான பானமாகக் கொடுத்தாலும் அசத்தலாம். சரி, இந்தச் சுவையான பருத்துப்பாலை வீட்டிலேயே எளிமையாகச் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பருத்தி விதை - 1 கப்
பச்சரிசி - 1\4 கப்
வெல்லம் - 3\4 முதல் 1 கப் வரை
தேங்காய் துருவல் - 1\2 கப்
ஏலக்காய் - 4
சுக்கு - சிறிய துண்டு அல்லது 1\2 டீஸ்பூன் பொடி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிறிய சிட்டிகை
பருத்தி விதையை ஊறவைக்கவும்
பருத்தி விதையை நன்றாகக் கழுவி, போதுமான தண்ணீர் ஊற்றி 8 முதல் 12 மணி நேரம் ஊறவைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை கழுவிக் கொள்ளவும். உணவுக்காக விற்கப்படும், உணவுப் பயன்பாட்டுக்கு ஏற்ற பருத்தி விதைகளை மட்டுமே பயன்படுத்தவும்.
பருத்திப்பால் எடுக்கவும்
ஊறவைத்த பருத்தி விதையை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கலவையை சுத்தமான மெல்லிய துணி அல்லது நுண்ணிய வடிகட்டி மூலம் வடிகட்டிப் பாலை எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள சக்கையில் மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டலாம்.
அரிசியை அரைக்கவும்
பச்சரிசியைக் கழுவி சுமார் 1 முதல் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இது பருத்திப்பால் கெட்டியான பதத்தில் வருவதற்கும் மென்மையாக இருப்பதற்கும் உதவும்.
பருத்திப்பாலை வேகவைக்கவும்
அடி கனமான பாத்திரத்தில் வடிகட்டிய பருத்திப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பின்னர் அரைத்த அரிசி விழுதைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டே தொடர்ந்து கிளறவும். கலவை அடிபிடிக்காமல் கவனித்து, பச்சை வாசனை நீங்கி ஓரளவு கெட்டியாகும் வரை நன்றாக வேகவைக்கவும்.
வெல்லப்பாகு தயாரிக்கவும்
வெல்லத்தைத் துருவி அல்லது சிறு துண்டுகளாக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதைச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொள்ளவும். இதனால் வெல்லத்தில் உள்ள தூசு அல்லது தேவையற்ற துகள்களை நீங்கும்.
வெல்லம் மற்றும் நறுமணப் பொருட்களைச் சேர்க்கவும்
பருத்திப்பால் நன்றாக வெந்ததும் வடிகட்டிய வெல்லப் பாகைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். பின்னர் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி, ஒரு சிட்டிகை உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். குறைந்த தீயில் மேலும் சில நிமிடங்கள் கிளறி, தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சூடாகப் பரிமாறவும்
தயாரான பருத்திப்பாலைச் சிறிது நேரம் ஆறவிட்டு, கிண்ணம் அல்லது டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு தேங்காய் துருவலை மேலே தூவலாம். ஆறும்போது பால் மேலும் கெட்டியாகும் என்பதால், தேவையெனில் சிறிது வெந்நீர் சேர்த்துச் சரிசெய்யலாம்.
பருத்திப்பால் சுவையாக வர சில சமையல் குறிப்புகள்