புதுச்சேரி ஃபேமஸ் பிரெட் பஜ்ஜி...நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும்

Published : Apr 18, 2025, 12:22 PM IST

புதுச்சேரியில் பிரபலமான உணவுகளில் ஒன்று பிரெட் பஜ்ஜி. இது சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பிரபலமானது தான் என்றாலும் புதுச்சேரியின் சிக்னேச்சர் உணவுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதை நம்ம வீட்டிலும் செய்து அசத்தலாம். லீவில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு விருப்பமானதாகவும் இருக்கும்.

PREV
14
புதுச்சேரி ஃபேமஸ் பிரெட் பஜ்ஜி...நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும்
புதுச்சேரி பிரெட் பஜ்ஜி:

பிரெட் பஜ்ஜி ஒரு எளிய, ஆனால் மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டியாகும். இது பெரும்பாலும் மாலை நேரங்களில் தேநீருடன் பரிமாறப்படுகிறது, மேலும் இதன் மொறுமொறுப்பான அமைப்பும், உள்ளே இருக்கும் மென்மையான பிரெட்டும் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த பஜ்ஜி, தெருவோர கடைகளிலும், வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுகிறது.
 

24
தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 6
கடலை மாவு (பேசன்) - 1 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி (உங்கள் விருப்பப்படி)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மேலும் படிக்க: கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா மணக்க மணக்க வீட்டிலேயே செய்யலாம்
 

34
செய்முறை :

1. ஒரு அகலமான மற்றும் ஆழமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை  சேர்க்கவும். இவை இரண்டும் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.

2. இப்போது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூளை மாவுடன் சேர்க்கவும். இவை மாவுடன் சமமாக கலக்கும்படி நன்றாக கிளறவும்.

3. தேவையான அளவு உப்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கவும்.

4. இறுதியாக, ஒரு சிட்டிகை சமையல் சோடாவை சேர்க்கவும். இது பஜ்ஜி மிருதுவாக வர உதவும்.

5. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்க ஆரம்பிக்கவும். கட்டிகள் எதுவும் இல்லாமல், மென்மையான தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். மாவு ரொம்ப திக்காகவோ அல்லது ரொம்ப தண்ணியாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாவை நன்றாக கலக்க ஒரு விஸ்க் அல்லது கரண்டியை பயன்படுத்தலாம். கரைத்த மாவை ஒரு 10-15 நிமிடம் அப்படியே வைக்கவும்.

6. பிரெட் துண்டுகளை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளலாம். பொதுவாக, முக்கோண வடிவம் அல்லது இரண்டு துண்டுகளாக வெட்டுவது வழக்கம். நீங்கள் முழு பிரெட் துண்டையும் பயன்படுத்தலாம்.

7. ஒரு ஆழமான கடாயில் அல்லது வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்திருக்கிறதா என்று பார்த்த பின்னர் வெட்டி வைத்துள்ள பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் நன்றாக தோய்த்து எடுக்கவும். பிரெட் துண்டின் இருபுறமும் மாவு நன்கு ஒட்டியிருக்க வேண்டும்.மாவில் தோய்த்த பிரெட் துண்டுகளை சூடான எண்ணெயில் மெதுவாக போடவும். பஜ்ஜிகளை பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரிக்கவும். அவ்வப்போது திருப்பி விடவும். பொரித்த பஜ்ஜிகளை எண்ணெயில் இருந்து எடுத்து, எண்ணெய் வடிய ஒரு தட்டில் வைக்கவும்.
 

44
பரிமாறுதல்:

சுவையான, மொறுமொறுப்பான புதுச்சேரி பிரெட் பஜ்ஜி இப்போது தயார்! இதை தக்காளி சாஸ், புதினா சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் தொட்டுக்கொள்ளும் பதார்த்தத்துடன் சூடாக பரிமாறவும்.
 

Read more Photos on
click me!

Recommended Stories