நாவில் எச்சில் ஊற வைக்கும் கருப்பட்டி மைசூர்பாகு.. எளிமையாக வீட்டிலே செய்யலாம்

First Published Jan 18, 2023, 6:07 PM IST

 Karupatti Mysore Pak recipe: உடலை சுறுசுறுப்பாக்கும் கருப்பட்டி மைசூர்பாகு செய்யும் முறை குறித்து இங்கு காணலாம். 

பனைமரத்தில் உள்ள எல்லா பொருள்களும் மருத்துவ பலன்கள் நிறைந்தவை. அதில் கிடைக்கும் பதநீரில் தான் கருப்பட்டி தயார் செய்யப்படுகிறது. இந்த கருப்பட்டியில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுகிறது. அதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திகூடும். கருப்பட்டியை இனிப்பு பண்டங்களில் சேர்க்கும்போது, உடலை சுறுசுறுப்பாக வைக்கும். இடுப்பு எலும்புகள், கர்ப்பப்பையை பலம் கொள்ள செய்யும். இத்தனை நன்மைகள் கொண்ட கருப்பட்டியை கொண்டு மைசூர்பாகு செய்வது குறித்து இங்கு காணலாம். 

தேவையான பொருள்கள்

கடலை மாவு ஒரு கப், பொடித்த கருப்பட்டி ஒரு கப், நெய், எண்ணெய், சுக்குத்தூள் ஆகியவை. இந்த பொருள்கள் கொண்டு சில நிமிடங்களிலேயே கருப்பட்டி மைசூர்பாகு செய்யமுடியும். 

மிதமான சூட்டில் பாத்திரத்தை வைத்து, கொஞ்சம் நெய் விட்டு நன்கு உருகி வரும்போது அதில் கடலை மாவை போட்டு வறுத்து கொள்ளுங்கள். இந்த மாவை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து கால் கப் எண்ணெய் ஊற்றி கட்டிகள் ஏதுமின்றி கலக்கி கொள்ளவும். இது தனியாக இருக்கட்டும். கருப்பட்டியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து கரைந்த பிறகு இறக்கிக் கொள்ளவும். இதனை வடிகட்டி தூசி போன்ற அசுத்தங்களை பிரித்தெடுக்கவும். பின்னர் சுக்குத்தூள் போட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை மறுபடி கொதிக்கவிடுங்கள். அடுப்பில் தீயை மிதமாக வைத்து, பாத்திரத்தில் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை கிளறி கொள்ளவும். அது கெட்டியாக மாறத் தொடங்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறுங்கள். கடலைமாவு பாத்திரத்தின் விளிம்புவரை வந்து வெளியேறும் வரை நன்கு கிளறுங்கள். அதன் பின்னர் இதனை இறக்கி நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவும். கொஞ்சம் ஆறிய பிறகு கத்தியால் விருப்பப்பட்ட வடிவங்களில் வெட்டி அனைவருக்கும் பரிமாறுங்கள். ருசியான கருப்பட்டி மைசூர் பாகு தயார். 

கருப்பட்டி உண்பதால் நன்மைகள்!  

கல்லீரல் சீராக செயல்பட உதவுகிறது கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தமாக்குகிறது கைக்குத்தல் அரிசியை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

click me!