பாதாம் பால்
இரவில் 15 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பாதாம் பருப்பை தோல் உரித்துக் கொள்ள வேண்டும். பாதாமுடன் 200 மி.லி., தண்ணீர் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான பாதாம் பால் தயார். அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் வைத்து விடலாம்.
பாதாம் பால் டீ
ஒரு டம்ளர் டீ-க்கு முக்கால் பங்கு அளவு இந்த பாதாம் பாலை எடுத்து சுட வைத்து, அடுப்பை சிம்மில் வைக்கவும். கால் பங்கு அளவு தண்ணீரில் இரண்டு ஏலக்காயை தட்டிப் போட்டு, டீத்தூள் சேர்த்து டிகாசன் தயாரித்துக் கொள்ள வேண்டும். டிகாசன் தயாரானதும் பாதாம் பாலில் கலக்கி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து வடிகட்டினால் சுவையான பாதாம் பால் டீ ரெடி.
பாதாம் பால் காஃபி
ஒரு டம்ளரில் தேவையான அளவு காபிதூள் எடுத்துக்கொண்டு, சூடான தண்ணீரில் கலக்கவும். இதனுடன் சூடான பாதாம் பால், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்தால் பாதாம் பால் காபி ரெடி.
பாதாமின் நன்மைகள்
வழக்கமான மாட்டுப் பாலை விட பாதாம் பாலில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.
உடலில் உள்ள எல்.டி.எல்., என்ற கெட்டக் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.
உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
இதில் குறைந்த அளவிலான கலோரிகள் மட்டுமே உள்ளதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.