அசைவ உணவு வகைகளில் மட்டன், சிக்கன்,மீன் ,நண்டு என்று பல விதங்கள் இருந்தாலும், கருவாட்டுக்கு என்று தணிக்க கூட்டமே உள்ளது. கருவாட்டினை குழம்பு வைத்து சாப்பிட்டால் வேறு எதையும் தேடவே மாட்டார்கள். அதன் வாசனைக்கே ஒரு தட்டு சாதம் அதிகமாக சாப்பிடுவார்கள். கருவாட்டு குழம்பை செய்து, மறுநாள் வைத்து சாப்பிட்டால், அதன் சுவையே வேறு லெவலாக இருக்கும். அதிலும் கிராமங்களில் செய்யப்படும் குழம்பின் ருசி அலாதியாக இருக்கும்.
இன்று நாம் கருவாட்டுடன் கத்திரிக்காயையும் சேர்த்து சமைக்க உள்ளோம். இதன் ருசி இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இதனை செய்யும் பொழுதே அந்த தெரு முழுவதும் கமகமக்கும் . இதனை எப்படி வீட்டில் சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கருவாடு – 1/4 கிலோ
கத்திரிக்காய் – 200 கிராம்
தக்காளி – 2
புளி – 1 லெமன் சைஸ்
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 10
மல்லித் தூள் – 50 கிராம்
பூண்டு – 4 பற்கள்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – 1/4 கப் ( துருவியது)
தொப்பை கிடுகிடுனு குறைய.. தினமும் காலையில் இந்த அற்புத டீ குடித்து பாருங்கள்..!
செய்முறை:
முதலில் கருவாட்டினை அலசி வைத்துக் .பின் அதே போன்று கத்திரிக்காயை அலசி ஒரே அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டினை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புளியை ஊற வைத்து கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், பொடித்த மிளகு, இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொண்டு பின் அதில் சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர், அதில் மல்லி தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின் கடாயை இறக்கி விட்டு கலவை நன்கு ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் , கடுகு, கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்து, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்போது வாணலியில் அரிந்து வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயை வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் வெந்த பின்,அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது பின் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க வைத்து பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால், கமகமக்கும் கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு ரெடி!