Greens: வீட்டில் அடிக்கடி சமைக்க வேண்டிய 5 கீரைகள்.. சமையல் முறையும் இதோ!

Published : Sep 01, 2026, 02:36 PM IST

Greens: அன்றாட உணவில் கீரைகளை சேர்ப்பது உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதில் பசலைக்கீரை, முருங்கைக்கீரை, உள்ளிட்ட 5 முக்கிய கீரைகளை எப்படி சமைக்கலாம்? அவற்றில் கிடைக்கும் சத்துக்கள் என்ன என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
மணத்தக்காளி கீரை (manathakkali keerai)

மணத்தக்காளி கீரை (Black Nightshade) வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தி அசிடிட்டி பிரச்சனையை சரிசெய்கிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும், இதில் உள்ள சத்துகள் கண் பார்வையைப் பாதுகாப்பதோடு, தோல் அலர்ஜியையும் தடுக்கிறது.

சமையல் குறிப்பு: மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்து கடையல் அல்லது கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். இதன் காய்களை காயவைத்து வற்றலாகவும் குழம்பில் சேர்த்து சாப்பிடலாம்.

25
முருங்கைக் கீரை(murungai keerai)

முருங்கைக் கீரை (Moringa) இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த மிகச்சிறந்த ஆரோக்கியமான கீரையாகும். இதில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் A, C உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பொதுவாக இதன் மரம் அனைவரது வீட்டிலும் நிச்சயம் இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் K உள்ளிட்ட சத்துக்கள் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்க உதவுகிறது. மேலும், நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஆதரிக்கிறது.

சமையல் குறிப்பு: 

  1. சின்ன வெங்காயம்,தேங்காய் மற்றும் பூண்டு சேர்த்து முருங்கைக் கீரை பொரியல் செய்யலாம்.
  2. பருப்பு சேர்த்து முருங்கைக் கீரை கடையல் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம்
  3. முருங்கைக் கீரை அடை
  4. காய்கறிகளுடன் சேர்த்து முருங்கைக் கீரை சூப் தயாரிக்கலாம்.
  5. தோசை மாவில் நறுக்கிய கீரையை சேர்த்து கீரை தோசை செய்யலாம்.
35
வெந்தய கீரை (Vendhaya Keerai)

வெந்தய கீரை (Fenugreek leaves) என்பது வெந்தயச் செடியின் இலைகள் ஆகும். இந்த கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A, C உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து பசியைத் தூண்டுகிறது.

சமையல் குறிப்பு:

  1. வெந்தயக் கீரையை பருப்புடன் சேர்த்து வெந்தய கீரை கூட்டு, சாம்பார் அல்லது கடைசல் செய்யலாம்.
  2. தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொரியல் செய்யலாம்.
  3. புளி மற்றும் தக்காளி சேர்த்து வெந்தய கீரை குழம்பும் வைக்கலாம்.
45
பொன்னாங்கண்ணி கீரை(ponnanganni keerai)

பொன்னாங்கண்ணி கீரை (Alternanthera sessilis) பாரம்பரிய உணவில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் கொடி வகைக் கீரையாகும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் A சத்துக்கள் கண் பார்வைக்கு உதவுகிறது. நார்ச்சத்து இருப்பதால் குடல் இயக்கத்திற்கு பயன்படுகிறது.

சமையல் குறிப்பு:

  1. பொன்னாங்கண்ணி கீரையை நறுக்கி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து சுவையான பொரியல் செய்யலாம்.
  2. பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்யலாம்.
  3. வேகவைத்த கீரையை கடைந்து, பூண்டு, சீரகம், மிளகாய் தாளித்து சாதத்துடன் சாப்பிடலாம்.
  4. வழக்கமான சாம்பாரில் பொன்னாங்கண்ணி கீரையைச் சேர்க்கலாம்.
55
பசலைக்கீரை (pasalai keerai)

பசலைக்கீரை (Spinach) தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய சத்துமிக்க கீரைகளில் ஒன்று. இவை உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கிறது. இந்த கீரையில் உள்ள லூட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

நார்ச்சத்து இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும், வைட்டமின் K எலும்பு ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையைப் போக்குகிறது.

சமையல் குறிப்பு: 

  1. பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்புடன் சேர்த்து பசலைக்கீரை கூட்டு செய்யலாம்.
  2. வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து சுவையான கீரை பொரியல் செய்யலாம்.
  3. சாம்பாரில் கீரையை சேர்த்து சமைக்கலாம்
  4. பசலைக்கீரையுடன் காய்கறிகள் சேர்த்து கீரை சூப் தயாரிக்கலாம்.
  5. அரைத்த கீரையை மாவில் கலந்து தோசை அல்லது அடை செய்யலாம்.
Read more Photos on
click me!

Recommended Stories