Coffee Without Coffee Powder: காபி பவுடர் இல்லாம காபி குடிக்கணுமா? கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை வறுத்து பொடியாக்கி, பால், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கும் எளிய செய்முறையை தெரிந்துகொள்ளுங்கள்.
காபி பவுடரே இல்லாமல் காபியா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் காபி குடிக்காமல் நாளே தொடங்காது என்பவர்களுக்கு இந்த வித்தியாசமான ஐடியா பிடிக்கலாம்.
வீட்டில் கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் இருந்தாலே போதும். அதை நன்றாக வறுத்து, பொடியாக அரைத்து, பாலுடன் சேர்த்து ஒரு சூடான பானமாக தயாரிக்கலாம். நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையும் மணமும் இன்னும் வித்தியாசமாக இருக்கும். காபி பவுடர் தீர்ந்துபோன நேரத்தில் ட்ரை செய்யக்கூடிய இந்த சுண்டல் பானம் எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.
24
தேவையான பொருட்கள்
கருப்பு சுண்டல் அல்லது வெள்ளை சுண்டல் - 1 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 1/4 முதல் 1/2 கப்
சர்க்கரை - நாட்டு சர்க்கரை - பனங்கற்கண்டு - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)
சுண்டல் காபி பவுடர் செய்வது எப்படி?
முதலில் உலர்ந்த கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். சுண்டல் முழுவதும் வறுபட்டு நல்ல வாசனை வர வேண்டும்.
வறுத்த சுண்டலை முழுமையாக ஆறவைத்த பிறகு மிக்சியில் போட்டு முடிந்தவரை நைசான பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள். பின்னர் சல்லடையில் சலித்தால் இன்னும் மென்மையான பொடி கிடைக்கும். இதை ஈரமில்லாத காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொள்ளலாம்.
34
சுண்டல் காபி செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்குங்கள். அதில் 1 முதல் 2 டீஸ்பூன் வறுத்த சுண்டல் பொடியை சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலக்கவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உங்களுக்கு விருப்பமான அளவு சர்க்கரை, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம். விரும்பினால் சிறிதளவு ஏலக்காய் தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.
இறுதியாக வடிகட்டி சூடாகப் பரிமாறுங்கள். வறுத்த சுண்டலின் மணத்துடன் கிடைக்கும் இந்த பானம் வழக்கமான காபியிலிருந்த roasted, nutty flavour கொண்டிருக்கும்.
முக்கிய குறிப்பு: இது காபி கொட்டைகளால் தயாரிக்கப்படும் வழக்கமான காபி அல்ல. எனவே காபியின் டேஸ்ட் அப்படியே இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. வறுத்த சுண்டலால் காபியை நினைவூட்டக்கூடிய வறுத்த மணமும் சுவையும் கிடைக்கலாம். காபி சேர்க்காததால் இயற்கையாக காபியில் இருக்கும் caffeine இதில் இருக்காது.
கருப்பு அல்லது வெள்ளை சுண்டலை வறுத்துப் பொடியாக்கி தயாரிக்கும் இந்த பானத்தில், சுண்டலில் இயற்கையாக உள்ள புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் போன்ற சத்துகள் கிடைக்கும்.
இதில் பால் சேர்த்துக் குடிக்கும்போது புரதம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B12 போன்ற சத்துகளும் கூடுதலாகக் கிடைக்கும். நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்ப்பது இனிப்பையும் கலோரியையும் அதிகரிக்கும் என்பதால் அளவாகப் பயன்படுத்துவது நல்லது.