
வயதானால் மட்டும்தான் முகம், நெற்றி, கண்கள் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் வரும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது தவறு. ஆம், இந்த காலத்துல நிறைய பேருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் வருகிறது. இதனால் அவர்கள் தங்களது உண்மையான வயதை விட அதிக வயதுடையவர்களாக தோன்றுவார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இப்படி நீங்களும் சரும சுருக்கத்தால் அவதிப்படுகிறீர்களா? இதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் இளம் வயதிலேயே சுருக்கம் வருவதை சுலபமாக தடுக்க முடியும். சரி இப்போது அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வர காரணங்கள் :
- சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும்போது சருமத்தில் நிறைய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் மடிப்புகள் தெரியும்.
- சூரிய ஒளியானது சருமத்தில் நேரடியாகப் படும்போது அதிலுள்ள புறஊதா கதிர்களின் தாக்கமானது சருமத்தை ரொம்பவே மோசமாக பாதிக்கும். இதன் விளைவாக, சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் புரத அமைப்பில் சேதம் ஏற்பட்டு, சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் பிக்மண்டேஷன் உண்டாகும். பிறகு நாளடைவில் இது வயதான தோற்றம் தெரியும். இதனால்தான் வெளியில் எப்போது சென்றாலும் மறக்காமல் கண்டிப்பாக சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
- புகைப்பிடித்தால் நுரையீரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் மட்டும் தான் பாதிக்கப்படும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நம்முடைய சருமமும் பாதிக்கப்படும் என்று பலர் நினைப்பதில்லை. ஆம், புகைப்பிடித்தால் உடல் உறுப்புகள் மட்டுமல்ல, நம்முடைய சருமமும் மோசமாக பாதிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தால் மிக விரைவிலேயே வயதான தோற்றத்திற்கு மாறிவிடுவீர்கள்.
- அடிக்கடி நெற்றியை மட்டும் மேலே நோக்கி உயர்த்துவது, கண் சிமிட்டுவது, வாயை அங்கும் இங்குமாக அசைப்பது, வாயை சிரிப்பது போல போலியாக வைப்பது, இதுபோன்ற வித்தியாசமான முகபாவனை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் சீக்கிரமே முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும். ஏனெனில் அடிக்கடி இந்த பழக்கத்தை செய்யும் போது அந்த குறிப்பிட்ட பகுதியின் தோளுக்கு அடியில் சிறிய பள்ளங்கள் தோன்றி சுருக்கங்கள் விழும்.
- சிலருக்கு மரபணு காரணமாக கூட மிக விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றும்.
இளம் வயதிலேயே சுருக்கங்கள் வருவதை தடுப்பது எப்படி?
இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1. நீங்கள் பகல் வேளையில் வீட்டில் இருந்தாலோ அல்லது வெளியில் சென்றாலோ, சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து உங்களது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக சன் ஸ்கிரீன் போட மறக்காதீர்கள்.
2. கடுமையான வெயிலில் வெளியே செல்லும்போது சூரியனின் ஒளி சருமத்தை நேரடியாக தாக்காதபடி முழுக்கை ஆடைகளை அணிய மறக்காதீர்கள்.
3. முகத்தை எப்போதுமே டி ஹைட்ரேடாக வைத்துக் கொள்ளுங்கள் இதற்கு முகத்தை கழுவிய உடனே மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துங்கள்.
4. உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். இது உங்களது ஆரோக்கியத்தை மட்டுமல்ல சருமத்தையும் கெடுக்கும்.
5. உங்களுக்கு 30 வயதிற்கு மேல் தாண்டிவிட்டால் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.
6. இவை எல்லாவற்றையும் விட சருமம் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சி, பயோடின், வைட்டமின் ஈ, மினரல்கள் ஆகியவை நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். மேலும் தினமும் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் வருவதற்கான காரணத்தை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே இனியாவது அவற்றை சரி செய்து, இளமையாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள்.