பிரேமம் படத்தில் அறிமுகமாகி ஷ்யாம் சிங்க ராய் படம் வரையிலும் தனது நடிப்பால் மக்களை கவர்ந்த சாய்ப்பல்லவியை எல்லோருக்கும் தெரியும். நடிப்பு மட்டுமா அவருடைய அட்டகாசமான நடனம் காண்போரை திகைக்க வைக்கும். அவர் திரையில் தோன்றினால் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துவிடுவார்கள். இதற்கு நடிப்பை தவிர்த்து அவருடைய நீண்ட கூந்தலும், எதார்த்தமான முக பாவனைகளும் தான் காரணம். துளியும் மேக் அப் இல்லாமல் வெளியே வரும் நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர்.
நடிகை சாய் பல்லவியின் மேக் அப் இல்லாத சிவந்த சருமமும், ரம்மியமான சுருள் முடியும் பல பெண் ரசிகைகளுக்கு கூட பொறாமை வரவழைக்கும் விஷயங்கள். குறிப்பாக அவருடைய முகப்பருவை மறைக்க அவர் ஒருபோதும் விரும்புவதில்லை. அதுவே அவருக்கு தனி அழகாக அமைந்துவிட்டது. செயற்கை அழகுசாதன பொருள்களை பயன்படுத்துவதில் சாய் பல்லவிக்கு துளியும் விருப்பம் இல்லை என அவரே சில பேட்டிகளில் சொல்லியிருப்பார். அப்படியானால் தன் அழகுக்கு அவர் என்னதான் செய்வார்? வாங்க பார்க்கலாம்.
சாய் பல்லவி சரும பராமரிப்பு:
சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் கவனம் செலுத்துகிறார். காய்கறிகள் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம். ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்கிறார். முகத்திற்கு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் அவரது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
"பிரேமம் படத்தில் எனக்கு நிறைய பருக்கள் இருந்தன. ஆனால் மக்கள் என்னை அப்படியே ஏற்றுக்கொண்டனர், மேலும் தன்நம்பிக்கையே உண்மையான அழகு என்பதை அப்போது நான் கற்றுக்கொண்டேன்" என சாய் பல்லவியே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.
அவர் எந்த அளவுக்கு செயற்கை அழகு பொருள்களுக்கு எதிரானவர் என்றால், ஒருமுறை ஃபேர்னஸ் க்ரீம் பிராண்டுடன் ரூ.2 கோடி மதிப்பில் விளம்பர வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடவில்லை. செயற்கை அழகு பொருள்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் நிராகரித்துவிட்டதாக பேட்டியில் சொல்லியிருப்பார்.
இது ஒருபுறமிருக்க சாய் பல்லவி தனது கல்லூரி நாட்களில் முடிக்கு கலரிங் செய்ததாகவும், அது தனது முடி சேதப்படுத்தியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இது போன்ற சொந்த அனுபவங்களில் இருந்தே செயற்கை பொருள்களை தவிர்க்க தொடங்கினாராம். இப்போது அவர் தனது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறார்.
சாய் பல்லவி கூந்தலுக்கு கற்றாழை உற்ற நண்பனாக விளங்குகிறது. அவர் தினமும் தன்னுடைய நீண்ட கூந்தலை வாஷ் செய்வாராம். தலைமுடிக்கும், தன்னுடைய சருமத்திற்கு கற்றாழையை அதிகம் பயன்படுத்துவாராம்.
சருமத்துக்கும் முடிக்கும் கற்றாழை ஜெல்!!
தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகிய சத்துக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். கற்றாழையை நேரடியாக செடியிலிருந்து எடுத்து அதனுடைய ஜெல்லை சருமத்தில் தடவலாம். இது சரும வறட்சியின் காரணமாக ஏற்படும் வீக்கம், சிவப்பைக் குறைக்க உதவுகிறது. தலைமுடிக்கும் நல்ல பலனை தரும். சாய்பல்லவியின் நீண்ட கூந்தல் பின்னால் இருக்கும் ரகசியம் கற்றாழை ஜெல் தான்!!