Hair Growth: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எளிய உணவுகள் இதோ!

First Published Oct 10, 2022, 11:19 PM IST

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாமல், இளவயது பருவத்தினருக்கும் கூந்தல் உதிர்வு பிரச்னை என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. கூந்தல் உதிர்வைத் தடுக்க கண்ட கண்ட எண்ணெய்களையும் வாங்கி பணத்தை வீணாக்குகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், 'உணவே மருந்து' என்ற முன்னோர்களின் நல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். சரியான மற்றும் முறையான உணவுப்பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆகவே, இப்போது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சில உணவுகளை இங்கு காணலாம்.
 

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. தலைமுடி சேதம் மற்றும் இளநரை போன்ற பிரச்னைகளை தவிர்க்க கறிவேப்பிலை உதவுகிறது. தினந்தோறும் காலையில் நான்கு கறிவேப்பிலைகளை அப்படியே மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

hair care

முருங்கை கீரை

முருங்கை கீரையில் ஃபோலேட், இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தச் சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாதாம் உள்ளிட்ட உலர் பருப்புகள்

பாதாம் உள்பட பல உலர் பருப்புகளில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, பி, ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்பட பல ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளது. இவை கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் ஆகும். மேலும் உடல் நலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆகவே, தினசரி காலையில் ஐந்து பாதாம் மற்றும் ஒரு வால்நட் என சாப்பிட்டு வரலாம்.
 

நிலக்கடலை

நிலக்கடலையில் உள்ள வைட்டமின் ஈ, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகிறது. எனவே, சிற்றுண்டி மற்றும் சாலட்டுகள் போன்ற பல உணவுகளில் ஊறவைத்த நிலக்கடலையை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

hair care

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் வல்லவை. பாரம்பரியமாக தயாரிக்கப்படும் எண்ணெய்களில் இது மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. இளநரை மற்றும் பொடுகுத் தொல்லை போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவுவதால், தினந்தோறும் ஒரு நெல்லிக்காயாவது சாப்பிடுவது நல்லது.

வெந்தயம்

கூந்தல் உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயம் மிக முக்கிய தீர்வாக விளங்குகிறது. இதில், பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளதால், சேதமான முடிகளின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், கூந்தல் வேர்கால்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. அடிக்கடி முதல்நாள் இரவு ஊறவைத்த வெந்தயத்தை மறுநாள் காலையில் சாப்பிட்டு வரலாம்.

click me!