Cucumber: உங்கள் சருமத்தை பாதுகாக்கும் மிகச் சிறந்த டானிக் வெள்ளரிக்காய்!

First Published | Oct 7, 2022, 6:03 PM IST

கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் காய் வகை தான் வெள்ளரிக்காய். இதனை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. வெள்ளரியில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான் மற்றும் குளோரின் போன்ற உடலுக்குத் தேவையான பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிகளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருக்கும் காரணத்தால் அழகு சாதன நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்தி வருகின்றனர்.
 

சருமத்தைக் காக்கும் வெள்ளரிக்காய் 

இள வயதில் நமது சருமம் இயல்பாகவே பொலிவுடன் காணப்படும். ஆனால், வயதாக ஆரம்பித்ததும் சருமத்தில் சுருக்கம் வரத் தொடங்கும். இதற்கு நம்  உடலில் நீர்ச்சத்து குறைவதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு, சருமம் எப்பொழுதும் இளமைத் தோற்றத்துடன் காணப்படும்.

வெள்ளரிக்காயில் 90 சதவீததிற்கும் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே, உடலில் தேங்கும் தீய நச்சுகளை வெளியேற்ற தினசரி ஒரு வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லது. இதனால் தேவையில்லாத நச்சுகள் சிறுநீர் மூலம் வெளியேறி விடும். உடலில் நச்சுகள் நீங்கினால் உங்கள் சருமம் மெருகேறுவது உறுதி. சருமத்தில் வெள்ளரிக்காயை தடவினால், சூரிய கதிர்களில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆகவே, வெள்ளரிக்காயை கொண்டு நாம் வீட்டிலேயே அழகியல் பொருட்களை மிக எளிதாக தயாரிக்கலாம். இதனை சருமத்தில் உபயோகப்படுத்தும் போது பருக்கள், ப்ளாக்ஹெட்ஸ் மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு கண்கள் மிக சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெள்ளரிக்காய் அதனை நீக்கி விடும்.

Tap to resize

வெள்ளரிக்காய் பேஸ் பேக்

வெள்ளரிக்காயை மசித்து கூழாக்கி உடனே பேஸ் பேக் செய்து விடலாம். முகச் சுருக்கம் மற்றும் சுருக்க கோடுகள் ஆகியவை தென்பட்டால், இந்த பேஸ் பேக்கை செய்து வாரந்தோறும் 3 முறை முகத்தில் பூசி வந்தால், சருமம் இளமையை திரும்பப் பெற்று விடும். கண்களுக்கு கீழ் வெள்ளரிக்காய் பேஸ் பேக்கைத் தடவினால் அங்குள்ள சுருக்கங்கள் குறைவது மட்டுமல்லாமல் கருவளையமும் மறையும். இந்த வெள்ளரிக்காய் மசித்த விழுதை கழுத்துப் பகுதியில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினால், அந்தப் பகுதியில் ஏற்படும் கறுப்பு படிமம் விரைவில் மறையும். இது சருமத்திற்கு சிறந்த டானிக் போல செயல்படும்.

வெள்ளரிக்காய் பேசியல் மாஸ்க்

வெள்ளரிக்காய், புதினா மற்றும் முட்டை வெள்ளைக்கரு சேர்த்து, நன்கு மிக்ஸியில் அரைத்து உடனடியாக பேசியல் மாஸ்க் செய்யலாம். முகத்தை நன்கு கழுவிய பின்னர், இந்த கூழை முகத்தில் மாஸ்க் போல தடவி விட வேண்டும். கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்துவிட்டு, 25 நிமிடங்கள் நன்கு உலர வைத்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இந்த பேசியலை செய்த பிறகு வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கெமிக்கல் கலந்த சோப்பைக் கொண்டு முகத்தை கழுவக் கூடாது. வீட்டிலேயே செய்யப்படும் இந்த ஆர்கானிக் பேசியலை மாதம் ஒரு முறையாவது போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.

Latest Videos

click me!