AIADMK Case: இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம்.. கதறிய ஓபிஎஸ்.. கைவிட்ட உச்சநீதிமன்றம்..!

First Published Dec 9, 2023, 7:03 AM IST

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 16-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது .

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் நீக்கத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. இறுதியில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆகையால் தடை விதிக்க முடியாது என கூறி  ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

supreme court

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூன்று முறை முன்னாள் முதல்வராக இருந்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர்களால் அதிமுக ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

நான் பங்குபெறாத பொதுக்குழு கூட்டத்தில் தன்னை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வாதிடப்பட்டது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் சின்னம் கொடி ஆகியவற்றை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம் என்று வாதிட்டார். இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டும் கூறி தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு  தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!