
2025-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ளதால், இந்த ஆண்டு வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன சாதனைகள் படைத்துள்ளது என்பதை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், தற்போது 2025-ல் ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் அதிக வசூலை வாரிக்குவித்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதையும், அதில் லீடிங்கில் உள்ள யார் என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
முதல் நாள் அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் 10வது இடத்தில் விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்து மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்திய இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் ரூ.8.70 கோடி வசூலித்தது. இதன் லைஃப் டைம் வசூல் 101 கோடியாகும்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் இந்த பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.13.10 கோடி வசூலித்திருக்கிறது. இதன் இறுதி வசூல் 151 கோடியாகும்.
தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த இட்லி கடை திரைப்படம் இந்த பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமும், தனுஷின் ஒண்டர்பார் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. அக்டோபர் மாதம் திரைக்கு வந்த இட்லி கடை திரைப்படம் முதல் நாளில் 14.75 கோடி வசூலித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த வசூல் 71.59 கோடியாகும்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த டியூட் திரைப்படம் இந்த லிஸ்ட்டில் 7ம் இடத்தில் உள்ளது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படம் முதல் நாளே ரூ.20 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இப்படத்தின் பைனல் வசூல் 114 கோடியாகும்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த மதராஸி திரைப்படம் இந்த பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் முதல் நாளில் ரூ.25.30 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தின் லைஃப் டைம் வசூல் 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ரெட்ரோ. இப்படம் இந்த லிஸ்ட்டில் 5-ம் இடம் பிடித்துள்ளது. 2டி நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே ரூ.31.45 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தின் இறுதி வசூல் ரூ.98 கோடியாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் இந்த பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனதால் இப்படத்திற்கு முதல் நாள் ரூ.38.85 கோடி வசூல் கிடைத்தது. இப்படம் இறுதியாக 97 கோடி வசூலித்து தோல்வி அடைந்தது.
அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.48.15 கோடி வசூலித்துள்ளது. இதன் லைஃப் டைம் வசூல் ரூ.137 கோடியாகும்.
அஜித் நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி, இந்த பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.52 கோடி வசூலித்தது. இதன் பைனல் வசூல் ரூ.247 கோடியாகும்.
முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.152.80 கோடி வசூலை வாரிக்குவித்தது. இதன் ஒட்டுமொத்த வசூல் ரூ.514 கோடியாகும். இதன்மூலம் தான் ஓப்பனிங் கிங் என மீண்டும் நிரூபித்து உள்ளார் ரஜினிகாந்த்.