
பாலய்யா மற்றும் காட் ஆஃப் மாசஸ் போன்ற பெயர்களால் பிரபலமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த தெலுங்குப் படம் முதலில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் நிதிப் பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. பிரச்சனை தீர்ந்த பிறகு, இப்போது திரைக்கு வந்துள்ளது. இது இயக்குனர் போயபதி ஸ்ரீனுவின் 2021 ஆம் ஆண்டு வெளியான 'அகண்டா' படத்தின் தொடர்ச்சியாகும். நந்தமுரி பாலகிருஷ்ணா தவிர, சம்யுக்தா மேனன், ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, சாஸ்வதா சட்டர்ஜி போன்ற நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலக வாழ்க்கையிலிருந்து விலகி, தனிமையில் வாழும் அகோரா (நந்தமுரி பாலகிருஷ்ணா) என்பவரின் கதை இது. ஆனால், அவர் சனாதன தர்மத்தைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறார். மகா கும்பமேளாவில் ஒரு கொடிய வைரஸ் தாக்கி மக்கள் இறக்கும்போது, இந்திய அரசு அதிர்ச்சியடைகிறது. அந்த வைரஸுக்கான மருந்து தயாரிக்கும் ஆய்வகம் தாக்கப்பட்டு, அதன் தலைவர் அர்ச்சனா (சம்யுக்தா மேனன்) கொல்லப்படும்போது இன்னும் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஆனால், இளம் விஞ்ஞானி ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) தடுப்பூசியுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். ஆனாலும், அவரது உயிருக்கு ஆபத்து நீடிக்கிறது. தாக்குதல்களுக்கு மத்தியில், அகோரா தனது மகள் ஜனனியைக் காப்பாற்ற வருகிறார். ஏனெனில், அவளுக்குத் தேவைப்படும்போது வருவேன் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். கதையில் பல திருப்பங்கள் வருகின்றன. நேத்ரா (ஆதி பினிசெட்டி), அவரது தந்தை எம்.எல்.ஏ. பாலமுரளி கிருஷ்ணா போன்ற புதிய கதாபாத்திரங்கள் நுழைகின்றன. கதை பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனும் இணைகிறது. இதையடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
'அகண்டா 2' படத்தின் கதையை போயபதி ஸ்ரீனு எழுதியுள்ளார், இது சற்று பழக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்தே இதைத் தொடங்கியுள்ளார். படத்தின் நேர்த்தியான தொடக்கம் ஒரு இயக்குநராக அவரது திறமையைக் காட்டுகிறது. அகோராவின் எண்ட்ரி உடன் படத்தில் ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. ஆனால் புதிய கதாபாத்திரங்கள் நுழையும்போது, மீண்டும் மீண்டும் வரும் வன்முறைக் காட்சிகள் கதையின் வேகத்தைக் குறைக்கின்றன. இருப்பினும், இடைவேளைக்குப் பிறகு படம் மீண்டும் வேகம் எடுத்து, இறுதிவரை ரசிகர்களைக் கட்டிப்போடுகிறது. மொத்தத்தில், அகோராவின் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஸ்ரீனு பெருமளவு வெற்றி பெற்றுள்ளார்.
நந்தமுரி பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், இரண்டு கதாபாத்திரங்களிலும் அவர் மிரட்டியுள்ளார். அகோராவாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ. பாலமுரளி கிருஷ்ணாவாக இருந்தாலும் சரி. எம்.எல்.ஏ. கதாபாத்திரம் சிறியது என்றாலும், தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நடிப்புடன், அவரது கம்பீரமான குரலில் பேசும் வசனங்கள் உங்களைக் கவரும். சம்யுக்தா மேனன் சிறப்பாக நடித்துள்ளார். சிறிய பாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
அகோராவின் மகள் ஜனனியாக ஹர்ஷாலி மல்ஹோத்ரா அசத்தியுள்ளார். அவரது உணர்ச்சிகரமான காட்சிகள் பெரிதும் ஈர்க்கின்றன. ஆதி பினிசெட்டி வில்லன் பாத்திரத்தில் மிரட்டலாகத் தெரிகிறார். தருண் கண்ணா, சிவன் வேடத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இவர்களைத் தவிர, சாஸ்வதா சட்டர்ஜி, கபீர் துஹான் சிங், சரத் லோஹிதாஸ்வ, அனீஷ் குருவில்லா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
நீங்கள் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ரசிகராக இருந்து, மாஸ் என்டர்டெய்னர் படங்களை விரும்பினால், இந்தப் படத்தைப் பார்க்கலாம். கதையில் புதுமை இல்லாதது இதன் மிகப்பெரிய பலவீனம். இருப்பினும், இதன் ஆக்ஷன், வசனங்கள் மற்றும் சனாதன தர்மத்துடனான தொடர்பு உங்களுக்குப் பிடிக்கலாம். அகண்டா முதல் பாகம் அளவிற்கு இல்லாவிட்டாலும் இதில் பாலய்யா ரசிகர்களை கவர்வதற்கான நிறைய அம்சங்கள் நிரம்பி இருக்கின்றன. குறிப்பாக இப்படத்தில் பனிப்பிரதேசத்தில் சூலாயுதத்துடன் பாலகிருஷ்ணா போடும் சண்டைக் காட்டி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பக்கா ட்ரோல் மெட்டீரியலாக அமையும்.