LR Eswari vs Ilaiyaraaja : தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்களை தனது இசையின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்த இளையராஜா பிரபல பின்னணி பாடகி எல்.ஆர் ஈஸ்வரிக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை. அதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் இசையுலகில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் எல். ஆர். ஈஸ்வரி. எம்.எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், ராமமூர்த்தி உள்ளிட்ட ஜாம்பவான்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கும் இவர், தனது வசீகர குரல் மூலம் தமிழ் இசை ரசிகர்களை கட்டி போட்டவர். ராமநாதபுரம் பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்கிற ஊரை பூர்வீகமாக கொண்ட இவரது சொந்த பெயர் லூர்து மேரி ஈஸ்வரி. கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். தனது தாயாருடன் குழு பாடகியாக (கோரஸ்) அறிமுகமானார்.
27
துள்ளல் பாடல்களில் அசத்திய ஈஸ்வரி
1958 ஆம் ஆண்டு வெளியான ‘நல்ல இடத்து சம்பந்தம்’ என்கிற படத்தில் தனது முதல் பாடலை பதிவு செய்தார். பின்னர் ஏராளமான துள்ளல் பாடல்கள் மற்றும் கிளாமர் பாடல்களை வெஸ்டர்ன் பாணியில் பாடி ரசிகர் மத்தியில் குதூகலத்தை உருவாக்கினார். மற்றொருபுறம் நேர்மாறாக ஆன்மீக பாடல்கள் குறிப்பாக அம்மன் பாடல்களை பாடி ஒவ்வொரு வீட்டிலும் தனது குரல் மூலம் சென்றடைந்தார். சூழலுக்கு ஏற்றபடி மாற்றி பாடுவதில் கில்லாடியான அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கூட திரைப்படப் பாடல்களை பாடி அசர வைத்திருந்தார்.
37
இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 7000-க்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கும் இவர், இளையராஜா இசையில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடி இருக்கிறார். ‘நல்லதொரு குடும்பம்’ என்ற சிவாஜி நடிப்பில் உருவான திரைப்படத்தில் ஒன், டூ, த்ரீ சாச்சாசா என ஆரம்பமாகும் பாடலை மட்டுமே அவர் பாடியிருக்கிறார். இன்று வரையிலும் இளையராஜா இசையமைத்து வந்தாலும் கடந்த 50 ஆண்டுகளாக இளையராஜா இசையில் அவர் வேறு எந்த பாடலையுமே பாடாமல் இருந்து வருகிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை உள்ளது என்கிற வதந்திகளும் கிளம்பி வருகின்றன.
ஆனால் இது குறித்து எல்.ஆர். ஈஸ்வரியிடம் ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த ஈஸ்வரி, “எனக்கும் இளையராஜாவுக்கும் எந்த விதமான சண்டையும் இல்லை. நான் அவரை தம்பி என்றே அழைப்பேன். என் மீதும் அவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இளையராஜா அறிமுகமான புதிதில் அவர் இசையில் பாடல் பாட என்னை அணுகினார்கள். ஆனால் புதிய இசையமைப்பாளர் என்பதால் நான் தயங்கினேன். அதற்கு பிறகு அவர் இசையில் பாடுவதற்கு எனக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் பத்திரிக்கைகளில் எனக்கும் ராஜாவுக்கும் சண்டை என எழுதுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை” என்று கூறியிருக்கிறார்.
57
கங்கை அமரன் சொன்ன உண்மை
அதேபோல் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இளையராஜாவிற்கும், எல்.ஆர் ஈஸ்வரிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற சரியான சந்தர்ப்பமும், சூழலும் அமையவே இல்லை. இளையராஜா எல்.ஆர் ஈஸ்வரி மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார். சிறுவயதில் ஈஸ்வரி அவர்கள் பாடுவதை பார்க்க சகோதரர்களை அழைத்துக் கொண்டு கச்சேரிகளுக்கு சென்று பார்த்த சம்பவங்களை எல்லாம் நினைவு கூறி இருந்தார்.
67
இசைஞானி இசையில் பாடாத ஈஸ்வரி
மேலும் இளையராஜாவின் இசை பாணி எல்.ஆர் ஈஸ்வரியின் பாடும் ஸ்டைலுக்கு பொருந்தாது என்ற கருத்தும் உண்டு. 70-களின் இறுதிகளில் தமிழ் சினிமா வடிவம் முற்றிலும் மாறியது. கிராமிய மணம் கமலும் மெலடி பாடல்கள் முன்னுக்கு வந்தன. துள்ளலிசை மற்றும் வெஸ்டர்ன் பாணி பாடல்களுக்கு பெயர் பெற்ற எல்.ஆர் ஈஸ்வரியின் குரல் இளையராஜாவின் இசை பாணிக்கு பொருந்தவில்லை. அவரது ஆரம்ப கால தேவைகளுக்கு பி.சுசீலா, எஸ். ஜானகியின் குரல்கள் அதிக பொருத்தமாக இருந்தன. குறிப்பாக எஸ்.ஜானகியின் குரல்கள் இளையராஜாவின் கிராமத்து இசைக்கு கச்சிதமாக பொருந்தி போகவே மாற்று குரலை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
77
அம்மன் பாடல்கள் தனி இடம் பிடித்த ஈஸ்வரி
தனக்கு வாய்ப்பு குறைந்த போதும் மனம் தளராத எல்.ஆர் ஈஸ்வரி ஆன்மீகப் பாடல்கள் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். இன்று கோயில் திருவிழாக்கள் என்றால் அவரது பாடல்கள் ஒலிக்காத இடமே இருக்காது. பலரது வீட்டிலும் மாலை நேரம் விளக்கேற்றும் பொழுது எல்.ஆர் ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள் ஒலிக்க தவறுவதில்லை.
இந்தியாவின் நைட்டிங்கேல் எனப்படும் வட இந்தியாவைச் சேர்ந்த லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, ஏன் ஸ்ரேயா கோஷல் வரை வாய்ப்பு கொடுத்த இளையராஜா துறுதுறுப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் துள்ளலிசை பாடல்களை தனித்துவமாக பாடி புகழ்பெற்ற எல்.ஆர் ஈஸ்வரியை பயன்படுத்தாமல் போனது இசை உலகிற்கே பேரிழப்பு என்று சொல்லலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.