Laddu paavangal : பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோ தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகம் முழுவதும் பேமஸ் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த லட்டு நெய் மணக்க செய்யப்படுவதால் டேஸ்டாக இருக்கிறது என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்க, அண்மையில் ஒரு பேரிடியாக வந்தது ஒரு ரிப்போர்ட். அதன்படி ஆந்திராவில் கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
24
Laddu Paavangal
இந்த லட்டு விவகாரம் தான் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒருபுறம் லட்டு சர்ச்சை ஓடிக்கொண்டு இருந்தாலும் மறுபுறம் திருப்பதி கோவிலில் லட்டு விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அண்மையில் திருப்பதி லட்டு விவகாரத்தை பற்றி பட விழாவில் காமெடியாக பேசிய நடிகர் கார்த்தியை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு கார்த்தி மன்னிப்பு கேட்டபின் அந்த மன்னிப்பை ஏற்ற பவன் கல்யாண், அவரின் மெய்யழகன் படத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து சர்ச்சைக்கு முடிவுகட்டினார்.
இந்த நிலையில், நேற்று கோபி சுதாகர் நடத்தும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பாவங்கள் என்கிற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை கன்னாபின்னானு ட்ரோல் செய்திருந்தனர். இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளியது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறியது. இதனால் கோபி சுதாகருக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.
இதனால் உஷாரான கோபி சுதாகர், இரவோடு இரவாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து லட்டு பாவங்கள் வீடியோவை நீக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு ஒன்றையும் போட்டுள்ளனர்.
44
Laddu Paavangal Video Deleted
அந்த பதிவில், அந்த வீடியோ நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும் அது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தனர்.
பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டாலும் அதை டவுன்லோடு செய்து பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி நேற்று கார்த்திக்கு வார்னிங் கொடுத்ததை போல் பவன் கல்யாண் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததால், பரிதாபங்கள் சேனலில் இருந்து லட்டு பாவங்கள் நீக்கப்பட்டதா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.