
நகைச்சுவை நடிகர் மதன் பாப்பின் மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த மதன்பாப், கடந்த சில ஆண்டுகளாகவே அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மதன் பாப்பின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதன் பாப்பின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார். இவர் சினிமாவுக்கு வந்த பின்னர் தான் தன்னுடைய பெயரை மதன்பாப் என மாற்றிக் கொண்டார். இவர் சினிமாவில் நடிகனானதே ஒரு விபத்து தானாம். இவருக்கு இசையின் மீது தான் ஆர்வம் இருந்துள்ளது. இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர், எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பணியாற்றி இருக்கிறாராம். ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராக ஜொலிக்க முடியாததால் நடிப்பு பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார் மதன்பாப்.
நடிகர் மதன் பாப்பை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர் தான். அவர் இயக்கிய நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் தான் அறிமுகமானார் மதன் பாப். அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து காமெடி வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார் மதன் பாப். இவரது நடிப்பை விட இவரை பேமஸ் ஆக்கியது இவரின் சிரிப்பு தான். அந்த தனித்துவமான சிரிப்புக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ப்ரெண்ட்ஸ், ப்ரியமான தோழி, வில்லன், யூத், சந்திரமுகி, ரன், ஜெமினி பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி இருக்கிறார் மதன் பாப். இதுதவிர சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்காற்றி இருந்தார்.
நடிகர் மதன் பாப் ஒரு காலத்தில் ஹெவி வெயிட் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். சார்பட்டா பரம்பரையில் இவரும் ஒருவராம். இதை ஒருமுறை இயக்குனர் பா.இரஞ்சித்திடமே கூறி இருக்கிறார் மதன் பாப். இதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட பா. இரஞ்சித், இது தெரிந்திருந்தால், உங்களையும் சார்பட்டா படத்தில் நடிக்க வைத்திருப்பேன் என சொன்னாராம். உடல்நலனிலும் கவனம் செலுத்திய மதன் பாப். உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம்முக்கு சென்று ரெகுலராக ஒர்க் அவுட் செய்வாராம்.
நடிகர் மதன் பாப் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். ஆனால் அவரின் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது. அவர் தன்னுடைய 71வது வயதில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. அவர் மறைந்தாலும் அவரது சிரிப்பு என்றென்றும் மக்கள் மனதில் ஆழமாய் பதிந்திருக்கும்.