Karthik Sabesh : தேவாவின் தம்பி மகன்... கோலிவுட்டின் நண்பேன்டா! யார் இந்த கார்த்திக் சபேஷ்? இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

Published : Oct 20, 2026, 06:40 PM IST

Karthik Sabesh Passes Away : இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மறைவு கோலிவுட் பிரபலங்கள் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் திரைப்பயணம் பற்றி பார்க்கலாம்.

PREV
15
யார் இந்த கார்த்திக் சபேஷ்?

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்த தேனிசைத் தென்றல் தேவாவின் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷின் மகனும், தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவருமான கார்த்திக் சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக தனது 37வது வயதில் இன்று (அக்டோபர் 20) உயிரிழந்தார். ஏற்கெனவே தந்தை மற்றும் பெரியப்பாவின் மறைவால் துயரத்தில் இருந்த குடும்பத்தினருக்கு கார்த்திக் சபேஷின் மரணம் மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற சபேஷ் - முரளி கூட்டணி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாகத் தனி அடையாளத்தைப் பெற்றவர்கள் சபேஷ் - முரளி சகோதரர்கள். தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பிகளான இவர்கள், தங்களுடைய அண்ணனிடம் மட்டுமின்றி இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இசைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இந்தச் சகோதரர்கள், தங்களுக்கு வாய்ப்பு கிடைத்த திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

குறிப்பாக, சேரன் இயக்கத்தில் வெளியான 'தவமாய் தவமிருந்து', வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' உள்ளிட்ட திரைப்படங்கள் இவர்களது இசைப்பயணத்தில் முக்கியமான படைப்புகளாக அமைந்தன. திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்த சபேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக தனது 68வது வயதில் காலமானார். அவரது மறைவு இசைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

35
தேவா குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இழப்புகள்!

தனது தம்பி சபேஷின் மறைவால் இசையமைப்பாளர் தேவா மிகுந்த மனவேதனை அடைந்திருந்தார். இந்த நிலையில், சபேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதற்குள் தேவாவும் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான ராணிப்பேட்டையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தத் துயரத்திலிருந்து குடும்பத்தினர் மீள்வதற்குள், தேவாவின் தம்பி மகனான கார்த்திக் சபேஷும் உடல்நலக்குறைவால் காலமான செய்தி குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, பெரியப்பாவின் மறைவு நிகழ்ந்து சில நாட்களே ஆன நிலையில், கார்த்திக் சபேஷின் மரணச் செய்தியும் வெளியாகியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45
பல திரைப்படங்களில் நடித்த கார்த்திக் சபேஷ்!

இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கார்த்திக் சபேஷ் நடிப்புத் துறையில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க முயற்சித்தவர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவர் குளிர் 100 டிகிரி, சிம்பு இயக்கிய வல்லவன், சித்தார்த் உடன் உதயம் என்.எச்.4, விஷால் மற்றும் சந்தானத்துடன் பட்டத்து யானை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதுதவிர காதல் சொல்ல வந்தேன், பர்மா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தகிட தகிட, மகாபலிபுரம் ஆகிய சிறு பட்ஜெட் படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக, 'குளிர் 100 டிகிரி' திரைப்படத்தில் கார்த்திக் சபேஷ் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பிறகு இடம்பெறும் 'மனசெல்லாம் உன்னை நினைத்து' எனத் தொடங்கும் பாடல் இன்றளவும் பல 90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்திக் சபேஷ், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

55
மனைவி, இரண்டு மகள்களை விட்டுச் சென்ற கார்த்திக் சபேஷ்!

37 வயதான கார்த்திக் சபேஷுக்கு ரம்யா கார்த்திக் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும், அவரது சகோதரிகளான கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்த எதிர்பாராத இழப்பால் மிகுந்த துயரத்தில் உள்ளனர். கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்றது.

இளம் வயதிலேயே நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்தது தமிழ் சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் தேவாவின் குடும்பத்தினரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories