மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் நரேன், பகத் பாசில், செம்பன் வினோத், ஷிவானி, மைனா நந்தினி, காயத்ரி, சுவதிஸ்டா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் பணியாற்றி இருந்தது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் ஏஜண்ட் டீனாவாக நடித்திருந்த வஸந்தி, ரோலெக்ஸாக கடைசி 5 நிமிடங்கள் மட்டுமே வந்து அதகளப்படுத்தி இருந்த நடிகர் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இதனால் இப்படம் மிகப்பெரிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டது. அதேபோல் அனிருத்தின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலம் சேர்த்திருந்தது.
விக்ரம் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. திரையிட்ட இடமெல்லாம் வசூலை வாரிக்குவித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ்நாட்டில் அதிக வசூல் குவித்த படம் என்கிர சாதனையை படைத்த விக்ரம், மொத்தம் 500 கோடிக்கு மேல் வசூலித்து அசத்தியது.
இதையும் படியுங்கள்... மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ
இந்நிலையில், இப்படத்தின் நூறாவது நாள் விழா நேற்று கோயம்புத்தூரில் உள்ள கேஜி திரையரங்கில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், விக்ரம் தான் டாப் மோஸ்ட் கலெக்ஷன் அள்ளிய படம் என புகழ்ந்து பேசினார்.
அவர் பேசியதாவது : கோயம்புத்தூரில் படங்களுக்கு நூறாவது நாள் விழா கொண்டாடி ஏரத்தாள 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழ் சினிமா ஆரம்பிச்சு நூறாண்டுகளை கடந்துவிட்டது. இந்த நூறாண்டு கால வரலாற்றில் நம்பர் 1 கலெக்ஷன், டாப் மோஸ்ட் கலெக்ஷன் அள்ளிய படம் விக்ரம் தான். இப்படம் ரெக்கார்ட் பிரேக் கலெக்ஷன் செய்ததில் திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கு சந்தோஷம் என கூறினார்.